fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரியில் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரியில் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரியில் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி நடந்தது.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி நேற்று நடந்தது. கல்வி மாவட்ட என்.ஜி.ஓ., ஒருங்கிணைப்பாளரும், பள்ளியின் தலைமை ஆசிரியருமான மகேந்திரன் வரவேற்புரையாற்றினார். பையூர் வேளாண் கல்லூரி பேராசிரியர் டாக்டர் கோவிந்தன், எலுமிச்சங்கிரி அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் ரமேஷ் பாபு, சமூக வனவியல் மற்றும் விரிவாக்க அலுவலர் சிவகுமார், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் பொறியாளர் முத்துராஜ் ஆகியோர் தங்களது கருத்துக்களை விளக்கினர். ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி நன்றி கூறினார்.

பயிற்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜன் பேசியதாவது: சமுதாயத்தில் நோயற்ற வாழ்வை வாழ மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் என்றால் என்ன, அதை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்கிக்கூற வேண்டும். அவர்களால் மட்டுமே இதை சமுதாயத்தில் கொண்டு சேர்க்க முடியும். நீர், நிலம், காற்று ஆகியவை மாசுபடாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். நீரை சுத்தமாக சேமிக்க வேண்டும். நிலத்தில் நல்ல விளைப்பொருட்களை விளைவிக்க வேண்டும். உரங்களை பயன்படுத்தி விளையும் பொருட்களால் பாதிப்பு ஏற்படும். உரத்தை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தி மண்ணை பாதுகாக்க வேண்டும். தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நீரால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கிறது. சட்ட விதிகளை பின்பற்றி கழிவுகளை நாம் வெளியேற்ற வேண்டும். நிறுவனங்களில் இருந்து வெளியேறும் புகையால் காற்று மாசுபடுகிறது. இதையெல்லாம் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 500க்கும் மேற்பட்டவர்களுக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன. இதில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ், சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகுமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமாவதி, கோபாலப்பா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், பசுமைத் தோழர் நட்டார்கனி உள்பட பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img