தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் அனைத்தையும் எவ்வித முடிவும் இன்றி ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவ்வாறு கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றால் அவை நிராகரிக்கப்பட்டதாக பொருள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார்.
மேலும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக மக்கள் மேற்கொண்ட மகத்தான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக, வெளிநாட்டினர் தூண்டுதல் பேரில் நடைபெற்ற போராட்டம் என்றும் ஆளுனர் கூறியிருக்கிறார்.
போராடிய மக்களை, தியாகம் செய்த மக்களை அவமானப்படுத்தும், செயலில் ஆளுநர் ஈடுபட்டுள்ளாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
ஆளுநரின் மேற்கண்ட கருத்துகளுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மசோதாக்கள் அனைத்தையும் நிராகரிக்கக் கூடிய அதிகாரத்தை யாரும் இவருக்கு வழங்கிடவில்லை என்றும் எதேச்சதிகாரத்தின் உச்சத்தை ஆளுநர் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் ஜனநாயகவாதிகள் எச்சரிக்கின்றனர்.
ஆளுநர், தான் வகிக்கும் மிக உயரிய பொறுப்பிற்கு மதிப்பளித்து கருத்துக்களைக் கூறுவதற்கு மாறாக, உயர்ந்தபட்ச பொறுப்பை அவமதிக்கும் செயலில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறாரா என்ற இன்னொரு கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்து பல மாதங்களாகிவிட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை.
அதனால் தானோ என்னவோ, ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தனக்களிக்கப்பட்டுள்ள கடமையை உணர்ந்து செயல்படவில்லை போலும். மாறாக தமிழ்நாட்டிற்கு, தமிழக மக்களுக்கு, தமிழக ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு தமிழ்நாட்டு மக்களை ஆத்திரமூட்டி சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கி அதன் மூலம் தங்களது மிகக் குறுகிய அரசியல் நோக்கத்தை ஒன்றிய அரசும், ஆளுநரும் நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறார்கள் என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.
ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவையின் கூட்டு ஆலோசனை அடிப்படையில் செயல்பட வேண்டுமென அரசியல் சாசனம் வகுத்தளித்துள்ளது. எனவே ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக பதவி விலக வேண்டுமென தமிழகம் முழுவதும் கண்டனக் குரல் எழுப்ப வேண்டுமென அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அறைகூவல் விடுக்கின்றனர்.
ஆளுநருக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் பொதுமக்களும் ஒன்றுபட்டு குரல் எழுப்பி, தமிழகத்திலிருந்து அவரை வெளியேற்றிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.



