தமிழ்நாட்டில் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்தே மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். குறிப்பாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், வேண்டுமென்றே இழுத்தடித்து வருகிறார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப் பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழக ஆளுநர் மாநில அரசுக்கே திருப்பி அனுப்பிய நிலையில், சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, அந்த மசோதாக்களை மீண்டும் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ளது.
இதற்கிடையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும் பலனில்லாத நிலையில்… இனியும் சகித்துக் கொள்ள முடியாத நிலையில் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
ஆளுநர்களுக்கு சட்டசபை மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் கிடையாது. 3 ஆண்டுகளாக மசோதாக்களை நிலுவையில் வைத்து கொண்டு என்ன செய்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி? என உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் கடுமையான கேள்வியை எழுப்பியது.
2020ஆம் ஆண்டு முதல் 180 மசோதாக்களில் 152 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டார் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதற்கு, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்துக்கு வரும் வரை மாநில ஆளுநர்கள் ஒப்புதல் தராதது ஏன்? என தலைமை நீதிபதி கிடுக்கிப்பிடி போட்டார்.
ஆக, ஆளுநருக்கு எதிராக அவர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி தீர்மானம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு என தமிழ்நாடு அரசு காட்டிய அதிரடியால் ஆளுநர் ஆர்.என்.ரவி பணிந்து விட்டார்.
உச்சநீதிமன்றம் தனது அதிருப்தி கணையை ஆளுநர் மீது துல்லியமாக வீசிய நேற்றைய தினமே, அ.தி.மு.கவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் மீதான ஊழல் வழக்கு தொடர்பாக அடுத்த கட்ட விசாரணைக்கு, நவம்பவர் 13ம் தேதி தமிழ்நாடு அரசின் கடிதத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி விட்டதாக ஆளுநர் தரப்பில் அவசரம் அவசரமாக தெரிவிக்கப்பட்டது.
அ.தி.முக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க ஒப்புதல் வழங்க கோரி கடந்த ஆண்டு ஆளுநரிடம் தமிழ்நாடு அரசு ஒப்புதல் கோரியது.
மாதங்கள் பல உருண்டோடியும் ஒப்புதல் வழங்காமல் இருந்த ஆளுநர் தற்போது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கிற்கு பணிந்து கடந்த 13ம் தேதியே ஒப்புதல் வழங்கிவிட்டதாக தகவல் சொல்லியுள்ளார்.
ஆளுநர் ஒருவாரத்திற்கு முன்பு வழங்கிய ஒப்புதலை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கும் வரை தமிழ்நாடு அரசுக்கு ஏன் தெரிவிக்கவில்லை? அன்றைய தினமே தெரிவித்து இருக்கலாமே. தாமதிப்பது என்ற பழக்கதோஷத்தில் இருந்து அவரால் மீளமுடியவில்லை போலும்.
தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாக்கள், கோப்புக ளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனுக்குடன் ஒப்புதல் தருவார் என்ற நம்பிக்கை விதை முளைத்துள்ளது. அதற்கான உரத்தை உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிறது.
தளிரானது செடியாகி, மரமாகி தமிழ்நாட்டின் வளர்ச்சி என்கிற பலனைத் தந்திட, அதனை நீரூற்றி வளர்த்தெடுப்பார் ஆளுநர் ஆர்.என்.ரவி என நம்புவோம்.
நடந்தது கடந்து போகட்டும் & இனி நல்லதே நடக்கட்டும்!



