இலக்கை நிர்ணயிப்பது மட்டுமல்ல, அந்த இலக்கை எட்டுவதற்கான செயல்பாடுகளில் முழுவதுமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயலாற்றும் குணம் கொண்டவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஆட்சிப் பொறுப்பேற்றபோது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்தார்.
தமிழகத்தின் தற்போதைய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 354 பில்லியன் டாலராக அதாவது ரூ. 28.3 லட்சம் கோடியாக உள்ளது.
வளர்ச்சி விகிதம் கடந்த நிதி ஆண்டில் 14.6 சதவீதமாக இருந்தது. வளர்ச்சி விகிதம் 17 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை உயர வேண்டும்.
அப்போதுதான் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு சாத்தியமாகும்.
இதற்காக தொழில் முதலீடுகள் பெருக வேண்டும். வெளிநாடுகளிலிருந்து தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் தொடங்கச் செய்யும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2021 ஜூலை முதல் இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ரூ. 2.95 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
இதன் மூலம் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு நாடுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ரூ.6,100 கோடி அளவுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இந்நிலையில், பெருமளவில் அன்னிய முதலீட்டை ஈர்க்கும் வகையில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை தமிழக அரசு நடத்த உள்ளது.
இந்த முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்குமாறும், தமிழகத்தில் தொழில் தொடங்குமாறும் கோரிக்கைகள் பல நாடுகளுக்கு விடுக்கப்பட உள்ளன.
நேரடியாக சில நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு கோரிக்கை விடுக்க முதல்வர் முடிவு செய்துள்ளார். இதன் ஒரு பகுதியாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
தொழில்நுட்ப பரிவர்த்தனைக்காக நிறுவனங்களிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்தப் பயணத்தில் மேற்கொள்ளப்பட்டாலும், தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்தது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடக்க உள்ள முதலீட்டாளர் மாநாட்டில்தான் வெளிப்படும்.
அப்போது பெருமளவில் இவ்விரு நாடுகளிலிருந்து நிறுவனங்கள் முதலீடு செய்யும்போது, அதற்கு உதவியாக இருந்தது முதல்வரின் இப்போதைய பயணம்தான் என்பது நிதர்சனமாகும்.
வலுவான அடித்தளம் இருந்தால் மட்டுமே உறுதியான கட்டிடம் சாத்தியம். அந்த வகையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்க்கவேண்டும் என்ற நோக்கில் முதல்வரின் பயணம் அமைந்துள்ளது. முதலீடுகள் குவியும், வேலை வாய்ப்பும் பெருகும் என்று நிச்சயம் நம்பலாம்!



