திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் நேற்று (மார்ச் 1) அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர் பயணத்தின் போது ஆய்வு மேற்கொண்டார்.
அவர் செய்தியார்களிடம் தெரிவித்ததாவது: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 166 மருத்துவர்களும் 225 செவிலியர்களும் உள்ளனர்.
670 படுக்கை வசதிகள் பயன் பாட்டிலும் புதிய கட்டடத்தில் 500 படுக்கை வசதிகள் என 1170 படுக்கை வசதிகள் உள்ளன. வெளிநோயாளிகள் பரிசோதனைக்கூடம், உள்நோயாளிகள் பரிசோதனைக்கூடம், தொற்று நோய் கண்டறியும் ஆய்வகம், கொரனோ தொற்று பரிசோதனை ஆய்வகம், பால்வினை நோய் கண்டறியும் ஆய்வகம் சளி பரிசோதனை மையம் என 6 ஆய்வக வசதிகள் உள்ளன.
நாளொன்றுக்கு 700 – 750 உள்நோயாளிகளுக்கும், 2000 – 2500 வெளி நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமருத் துவம், பொது அறுவை சிகிச்சை மையம், எலும்பு முறிவு பகுதி, காது, மூக்கு மற்றும் தொண்டை பகுதி, மகப்பேறு பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, ஆதரவற்ற மனநலப்பகுதி, போதை தடுப்பு பிரிவு, குழந்தைகள் பிரிவு, ரத்த வங்கி, 24 மணி நேர அறுவை சிகிச்சை பிரிவு, குடும்ப நல அறுவை சிகிச்சை பிரிவு, ஆண் குடும்ப கட்டுப்பாட்டு மையம், ஆதரவற்ற மனநோயாளிகள் பிரிவு, இரத்த சுத்திகரிப்பு பிரிவு, புற்றுநோய் பிரிவு, காது கேட்கும் திறன் மற்றும் பேச்சு திறன் ஆய்வு பிரிவு, பால்வினை நோய் பிரிவு, தொழுநோய் பிரிவு, கண் மருத்துவம், அறுவை சிகிச்சை பகுதிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
போதை தடுப்புப் பிரிவு
போதை தடுப்புப் பிரிவில் தற்போது 8 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடந்த மாதத்தில் மட்டும் 30 நபர்கள் குணமடைந்துள்ளனர். ஆதரவற்ற மனநல பிரிவில் தற்போது 22 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த மாதத்தில் 8 நபர்கள் குணமடைந்து காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத்.
முன்னதாக, ஆட்சியர் போதை தடுப்பு சிகிச்சை பிரிவு மற்றும் ஆதரவற்ற மனநல பிரிவு ஆகிய பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை முறைகள் மற்றும் உடல் நலம் பற்றிக் கேட்டறிந்தார்.
செய்தியாளர் பயணத்தின் போது, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.முருகேசன், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெயசங்கர நாராயணன், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் முரு கேசன், மனநல மருத்துவர்கள் சஞ்சய், தீபக், உறைவிட மருத் துவர் கோபால கிருஷ்ணன், உதவி உறைவிட மருத்துவர் சரவணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.