திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ஆட்சியர் தெரிவித்ததாவது: திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அனைத்து வட்டங்கள் வாரியாக நடத்தப்பட்டது. மேலும், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட 1159 மனுக்களில் 1139 மனுக்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ.50.05 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
நலன்காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு அடையாள அட்டை மற்றும் பிற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்தார்.
தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறப்பு பள்ளிகள், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 10 வயது, 11 முதல் 17 வயது, 18 வயது ஆகிய பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்ற 63 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.1000/-, இரண்டாம் பரிசாக ரூ.500/-, மூன்றாம் பரிசாக ரூ.250/- மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், மேலும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு கேடயங்களையும், 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.99,160/- மதிப்பீட்டில் செயற்கைகால், தையல் இயந்திரம் மற்றும் சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
முன்னதாக, மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை யும், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.மீரா, முதல்வர் (திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை) மரு.மனோன்மணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார், இளநிலை மறுவாழ்வு அலுவலர் குழந்தைசாமி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ராஜபாண்டி, தனியார் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.



