‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் மொத்தம் 97 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயின்ற 11,651 மாணவர்களும், 11,789 மாணவிகளும் ஆக மொத்தம் 23,440 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
‘ஈடில்லா ஆட்சி – ஈராண்டே சாட்சி’ என்பதற்கிணங்க கல்வியும், சுகாதாரமும் தமிழ்நாடு அரசின் இரு கண்கள் என்பதனை கருத்தில் கொண்டு, ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தினை மேம்படுத்துக்கிற வகையில், எண்ணற்ற கல்வி சார்ந்த திட்டங்களை தீட்டி, அதனை செயல்படுத்தி, மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தினை மேம்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அனைத்து ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்திடும் வகையில்; ‘இல்லம் தேடிக்கல்வி திட்டம்’, ஆரம்பப்பள்ளி பயில்கின்ற மாணவ, மாணவிகளின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்திடும் வகையில், ‘எண்ணும் எழுத்தும் திட்டம்’, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 -ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளிடம் இயல்பாகவே உள்ள படைப்பாற்றல் ஆர்வத்தினை வளர்த்தெடுத்திடும் வகையில், ‘எங்கும் அறிவியல், யாவும் கணிதம்’ என்பதனை கருத்தில் கொண்டு, வானவில் மன்றம், பெண் கல்வியை ஊக்குவித்திடும் பொருட்டு புதுமைப் பெண் திட்டத்தினை (மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம்) அரசுப்பள்ளிகளில் பயிலுகின்ற ஏழை மாணவ, மாணவிகளின் கல்வியினை ஊக்கப்படுத்திடவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கிடவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்த்திடும் பொருட்டு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி, ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தி வருகிறார்.
நாளைய சமுதாயம் வெறும் ஏட்டுக் கல்வியாக மட்டும் அல்லாமல் பல்திறன் வளர்க்கும் கல்வியாக மேம்படுத்திட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, கனவுத்திட்டமான உலகை வெல்லும் இளைய தமிழகம் – ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு, மாணவ, மாணவிகளின் படிப்பு, அறிவு, சிந்தனை, ஆற்றல் திறமை உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது, தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது, அடுத்தடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என வழிகாட்டுதல், தமிழில் தனித்திறன் பெறவும், சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப்பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவிகளின் கல்வி தரத்தினை மட்டுமின்றி வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறார் முதல்வர்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் 70 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயின்ற 3,485 மாணவர்களும், 3,181 மாணவியர்களும், பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற 2,970 மாணவர்களும், 2,996 மாணவியர்களும், 27 அரசு உதவி பெறும் மேல்நிலைப்;பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயின்ற 2,721 மாணவர்களும், 2,795 மாணவியர்களும், பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற 2,475 மாணவர்களும், 2,817 மாணவியர்களும் என மொத்தம் 97 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற 11,651 மாணவர்களும், 11,789 மாணவியர்களும் ஆக மொத்தம் 23,440 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
‘மேம்பட்டது கல்வித் தரம்’
பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட சருத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற கோபிதரன் கூறியதாவது:
அப்பா விவசாயக் கூலி. 12-ம் வகுப்பு முடித்தவுடன் என்ன படிக்காலம், எங்கு படிக்கலாம் என்பது குறித்து, பள்ளியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு, தனியாக வகுப்புகள் நடத்தினார்கள். இப்பயிற்சி வகுப்பின் மூலம் மேற்படிப்பு படிப்பினை தேர்வு செய்வதற்காக ஏதுவாக அமைந்துள்ளது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 546 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு அரசு உதவியுடன் சென்னையில் இலவசப் பயிற்சி பெற்று வருகிறேன். அரசு பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்க உள்ளேன். இதுபோன்ற கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி கல்வித்தரத்தினை மேம்படுத்தி, வாழ்வில் ஒளிவிளக்கேற்றி வருகிற முதல்வருக்கு நன்றி என்றார்.
‘தன்னம்பிக்கை பெற்றேன்’
ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட கண்டனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவி காவியா தெரிவித்ததாவது:
அப்பா தனியார் மில்லில் வேலை செய்கிறார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 546 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பல்வேறு மேற்படிப்பு சார்ந்த பயிற்சி வகுப்புகள் மற்றும் தொழில் சார்ந்த பயிற்சி வகுப்புகள் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட்டன. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட இப்பயிற்சி வகுப்பு இப்போது என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதனை தேர்வு செய்வதற்கு எளிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
அரசு பொறியியல் கல்லூரி சேர்வதற்கு விருப்பமாக உள்ளேன்., தன்னம்பிக்கை வளர்க்கக் கூடிய ‘நான் முதல்வன்’ திட்டத்தினை செயல்படுத்தி, கல்வித்தரத்தினை மேம்படுத்தி வருகிற முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.
டாக்டர் கலைஞர் காட்டிய வழியில் செயல்பட்டு வருகிற முதல்வர், ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தினை மேம்படுத்துக்கின்ற வகையில் எண்ணற்ற கல்வி சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி அவர்களது கல்வித்தரத்தினை மேம்படுத்தி வருகிறார்.
‘நான் முதல்வன்’ திட்டத்தினை செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக முதல்வர் தலைமையிலான தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்பதே தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் எழுச்சிமிகு கருத்தாகிறத!
தொகுப்பு:-
சு.ஜெகவீரபாண்டியன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
தேனி மாவட்டம்.



