எம்.எஸ்.எம்.இ உற்பத்தித் துறைக்கு அவசர சீர்திருத்தங்கள் அவசியமாக உள்ளது.
இந்திய ரயில்வே, பொதுத்துறை நிறுவனங்கள் (PSU) மற்றும் அரசு நிறுவனங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் பல சிறு மற்றும் மிகச் சிறு உற்பத்தி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ரயில்வே உபகரண வழங்குநர்கள் சங்கம் (RASA), 2026–27 மத்திய பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய முக்கிய கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை மத்திய நிதியமைச்சரின் கவனத் திற்கு கொண்டு வருகிறது.
இது குறித்து ரயில்வே உபகரண வழங்குநர்கள் சங்கம் தலைவர் சிவ. சுருளிவேல் கூறியுள்ளதாவது: தற்போது 90 நாட்களில் என்.பி.ஏ (செயலிழந்த கடன்) என வகைப்படுத்தப்படுவது எம்.எஸ்.எம்.இ.,க்களுக்கு 180 நாட்களாக உயர்த்தப்பட வேண்டும்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பணம் தாமதமாக கிடைப்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எம்.எஸ்.எம். இ.,க்களுக்கு வழங்கப்படும் வங்கிக் கடன்களின் வட்டி விகிதம், விவசாய கடன் களுக்கு இணையாக இருக்க வேண்டும். எம்.எஸ்.எம்.இ.,க்கள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கியத் துறை ஆகும்.
எம்.எஸ்.எம்.இ.,களில் தனியான ‘நானோ’ பிரிவு உருவாக்கப்பட வேண்டும். முதலீடு ரூ.1 கோடி வரை, ஆண்டு வருவாய் ரூ.5 கோடி வரை இதன் மூலம் மிகச் சிறிய தொழில்களுக்கு நேரடி உதவிகள் கிடைக்கும்.
பி.எஸ்.யு மற்றும் அரசு நிறுவனங்களின் டெண்டர்களில் எஃகு பொருட் களையும் பி.வி.சி-யில் சேர்க்க வேண்டும். தற்போது வெள்ளி, செம்பு மட்டும் சேர்க்கப்பட்டதால், எஃகு விலை மாற்றம் எம்.எஸ்.எம்.இ.,க்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது.
எம்.எஸ்.எம்.இ.,க் களுக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கீடு தேவை. தற்போதுள்ள ரூ.23,000 கோடி போதுமானதல்ல. குறைந்தது ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இதனால் தொழில்நுட்ப மேம்பாடு, சந்தைப்படுத்தல், ஏற்றுமதி மற்றும் திறன் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியும்.
அசாதாரண விலை உயர்வுகளை கட்டுப்படுத்த, மூலப்பொருட்களின் விலையை கண்காணிக்க / நிர்ணயிக்க அரசு ஒரு குழுவை அமைக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி அதிகாரிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கான பதிவுகளை மட்டும் கேட்க வேண்டும்.
5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்திற்கு தேவையில்லாமல் நோட்டீஸ் அனுப்புவது எம்.எஸ்.எம்.இ.,க்களுக்கு தொந்தரவாக உள்ளது. இவ்வாறு கூறினார்.



