fbpx
Homeபிற செய்திகள்ஏன் இந்த மாற்றம்? விவசாயிகள் அதிர்ச்சி

ஏன் இந்த மாற்றம்? விவசாயிகள் அதிர்ச்சி

குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிடம் இருந்து அரசாங்கமே நேரடியாக நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நேரடி நெல் கொள்முதலுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள விலை வெளிச்சந்தை விலையைவிட ஆதாயமாக இருப்பதால் விவசாயிகள் இங்கே விற்க விரும்புகிறார்கள். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (டி.என்.சி.எஸ்.சி) தனது நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் இந்த கொள்முதலை மேற்கொள்கிறது.

மொத்தம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில், பெரும்பான்மையானவை டெல்டா மாவட்டங்களில் உள்ளன. ஒவ்வொரு பருவத்திற்கும் தேவைக்கும் ஏற்ப கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

குறுவை சாகுபடியில் அறுவடையாகும் நெல் அக்டோபர்-, நவம்பர் மாதங்களிலும், சம்பா பட்டத்தில் அறுவடையாகும் நெல் ஜனவரி, -மார்ச் மாதங்களிலும் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் வாங்கப்படுகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்கள் தவிர மீதமுள்ள மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நெல் கொள்முதல் செய்யப்படாது என்றும், அந்த மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படும் அதிகாரம் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது விவசாயிகளுக்கு அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது.

மாநில அரசுகளின் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படும் போது உழவர்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைப்பதால், அதை சிதைக்கும் வகையில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் வாயிலாக நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு முயற்சிப்பது ஏற்புடையது அல்ல.

மாநிலம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பிலேயே தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்றால், தமிழக அரசே நேரடியாக நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் ஏகோபித்த விருப்பம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து நல்ல அறிவிப்பு விரைவில் வருமென விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்!

படிக்க வேண்டும்

spot_img