சமூக வலைதளங்களின் தாக்கத்தால் இன்று தும்மினால் கூட அதையே ரீல்ஸ்-ஆக எடுத்து பதிவிட்டு லைக்ஸ்களைக் குவித்து வருகின்றனர் இளைய தலைமுறையினர். ஆனால் தான் ஆடிய ஒரு சினிமா பாடல் நடனத்திற்காக வந்த எதிர்மறை விமர்சனங்களைத் தாண்டி இன்று நீட் தேர்வு எழுதி இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பிற்குத் தேர்ச்சி பெற்றிருக்கிறார் ஒரு தமிழக மாணவி.
கடந்த 2022-ம் ஆண்டில் தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கலை, இலக்கிய, தனித்திறன் போட்டிகள் நடைபெற்றது. இதில் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை நிரூபித்து பரிசுகளை வென்றனர்.
அப்படி அந்நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு மாணவி சினிமா பாடல் ஒன்றிற்கு நடனமாடினார். அந்த வீடியோ வைரலானது. புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த ஆர்த்தி என்ற அந்த மாணவியின் நடனம் சமூக வலைதளங்களில் 30 லட்சம் பார்வைகளைப் பெற்றது. மாணவியின் நடனத்திற்கு எதிர்மறை கமெண்டுகள் வந்தது. பலரும் கண்டித்தனர்; நேரடி கேலி, கிண்டலுக்கும் ஆளானார்.
ஆனால் அதையெல்லாம் அம்மாணவி கண்டுகொள்ளவில்லை. மனம் கலங்காமல் பிளஸ் 2-வில் நன்கு படித்தார். டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வினை எதிர் கொண்டார். ஆனால் முதல் வாய்ப்பில் அவருக்கு தோல்வியே கிடைத்தது. எனினும் மனம் தளராமல் இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.
இதனையடுத்து அரசுப்பள்ளி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அம்மாணவிக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்திருக்கிறது.
தன்மீது விழுந்த விமர்சனங்களை கண்டு துவளாமல் அதை அப்படியே ஓரங்கட்டி வைத்து மீண்டும் படிப்பில் நாட்டம் கொண்டு இன்று இந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறார் மாணவி ஆர்த்தி. மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த இம்மாணவி இன்று முயன்றால் முடியாதது இல்லை என்பதை தனது டாக்டர் கனவினை நனவாக்கி நிரூபித்து காட்டி இருக்கிறார்.
எதிர்மறை விமர்சனங்கள், தூற்றல்களை புறந்தள்ளி சாதிப்பதை மட்டுமே முன்னெடுத்துச் சென்றால் வெற்றி நிச்சயம். சக மாணவிகளுக்கு மட்டுமல்ல மாணவர்களுக்கும் இந்த இளம் வயதிலேயே ஆர்த்தி வழிகாட்டியாக மாறி இருக்கிறார்.
வாழ்த்துகள்!