fbpx
Homeதலையங்கம்2026ல் ஓட்டு போட ஒரேவழி - சிறப்பு முகாமிற்கு செல்லுங்கள்!

2026ல் ஓட்டு போட ஒரேவழி – சிறப்பு முகாமிற்கு செல்லுங்கள்!

வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தற்போது தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில், மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 15 சதவீதத்தை தாண்டுகிறது. தேர்தல் ஆணையம் அளித்த தகவலின்படி, நீக்கப்பட்டவர்களில் 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர் இறந்தவர்கள்.


3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேருக்கு இரட்டைப் பதிவு இருந்தது.
ஆனால் முகவரியில் இல்லாதவர்கள் எனக் கூறி நீக்கப்பட்டவர்கள் மட்டும் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர். இவர்கள் அனைவரும் உண்மையிலேயே முகவரியில் இல்லாதவர்களா அல்லது தவறாக நீக்கப்பட்ட தகுதியான வாக்காளர்களும் உள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


தங்களின் பெயர் தவறாக நீக்கப்பட்டதாக நினைக்கும் வாக்காளர்கள், படிவம் 6 மூலம் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர விண்ணப்பிக்கலாம். அதற்கான அவகாசம் ஜனவரி 18 வரை வழங்கப்பட்டுள்ளது.


வாக்காளர் பெயர் சரிபார்ப்பு பெயர் நீக்க படிவம் 7, திருத்தம் மற்றும் இடமாற்றத்துக்கு படிவம் 8 பயன்படுத்தப்படுகின்றன. ஆதார் எண் மட்டும் ஆவணமாக ஏற்கப்படாது.


அதோடு சேர்த்து பிறப்பு சான்று அல்லது இருப்பிடச் சான்று போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதுவரை சுமார் 4 லட்சத்து 42 ஆயிரம் பேர் மட்டுமே பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இந்த மனுக்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்கள் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படுவார்கள்.


இதற்காக தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக இன்று மற்றும் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. வாக்காளர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17 அன்று வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
வாக்களிப்பது ஜனநாயக கடமை மட்டுமல்ல, உரிமையுமாகும். உண்மையான வாக்காளர்கள் ஒருவர் பெயர் கூட வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் சேர்க்கப்பட்டால் தான் தேர்தல் எனும் ஜனநாயகத் திருவிழா, புகார்கள், குற்றச்சாட்டுகள் இல்லாமல் கோலாகலமாக நடந்தேறும்.


ஒவ்வொரு வாக்காளரும் தமது பெயர், பட்டியலில் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் நாளை நடக்கும் முகாமையாவது தவிர்க்காமல் சென்று தங்கள் பெயர் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.


முகாம்களில் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி, அவர்களின் வாக்குரிமையை மீட்டுக்கொடுக்க அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

படிக்க வேண்டும்

spot_img