fbpx
Homeதலையங்கம்பொங்கலுக்குள் உருமாறும் தமிழக தேர்தல் கூட்டணி!

பொங்கலுக்குள் உருமாறும் தமிழக தேர்தல் கூட்டணி!

கடந்த 2021ல் அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக வெறும் 4 இடங்களில் மட்டுமே வென்றது. 2024 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை.

இப்போது 2026 தேர்தலுக்கு மீண்டும் பாஜக, அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கி உள்ளது.

ஆனால், இந்த கூட்டணிக்கு புதிதாக வேறு எந்த கட்சியும் இதுவரை வரவில்லை. தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன. ஓபிஎஸ், டிடிவி.தினகரன் தரப்பு ஒரு பக்கம் தனியாக உள்ள நிலையில், விஜய்யின் தவெக கட்சியும் தனியாக இருக்கிறது.

மற்ற கட்சிகளை ஒரே கூட்டணியின் கீழ் எடப்பாடி பழனிசாமியால் கொண்டு வர முடியாததால் அமித் ஷா அதிருப்தியில் இருப்பதாகத் தகவல். இதன் காரணமாகவே தமிழகத்திற்கு வந்த போதும் எடப்பாடி பழனிசாமியை அமித் ஷா சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தைக் கூட்டணிக்குள் கொண்டு வருவதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. காங்கிரஸ் திமுக கூட்டணியில் உறுதியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும் ஏடாகூடமாக ஏதேனும் நடந்து காங்கிரசும் தவெகவும் கைகோர்த்து விடுமோ என்ற அச்சமும் பாஜகவுக்கு உள்ளது.

அதனால் தான் விஜய் கட்சி உடனான கூட்டணிக்கான முயற்சியை பாஜக தீவிரப்படுத்தியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கொள்கை எதிரியான பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை என்கிறது தவெக தரப்பு.

மேலும், 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி & என்டிஏ கூட்டணி என மட்டுமே இருக்க வேண்டும். வாக்குகள் பிரிவதை அனுமதிக்க முடியாது. பொங்கலுக்குள் ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று அமித் ஷா நேறறைய தினம் அறிவுறுத்திச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை உணர்த்தவே எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்காமல் அமித் ஷா புறப்பட்டுச் சென்று விட்டார்.

ஜல்லிக்கட்டோடு பொங்கல் களைகட்டப் போகிறது. அதேபோல முதல்வர் நாற்காலிக்கான தேர்தல் ஜல்லிக்கட்டில் களமிறங்கப்போகும் கூட்டணிகளும் பொங்கலுக்குள் உறுதியாகி விடும்.

கூட்டணியை கட்டமைப்பதில் எடப்பாடி பழனிசாமியின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? அமித் ஷா முயற்சிக்கு பலன் கிடைக்குமா? தமிழ்நாட்டின் தேர்தல் கூட்டணிகளில் என்னென்ன மாறுதல்கள் அரங்கேறப்போகிறதோ?

எதிர்பார்ப்போடு பொங்கல் திருநாளுக்காக காத்திருப்போம்!

படிக்க வேண்டும்

spot_img