மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவால் 29 வயது இளைஞர் ஒருவருக்கு மீண்டும் மீண்டும் ஏற்பட்ட பக்கவாதத்திற்கு, சென்னையின் முன்னணி மருத்துவமனையான சிம்ஸ் மருத்துவமனை வெற்றிகரமாக சிகிச்சை யளித்துள்ளது. மேலும், அவரது இதயம் மற்றும் காலிலும் இரத்த உறைவுக் கட்டிகள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கும் உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டதன் மூலம் அந்த உறுப்புகளும் பாதிப்பிலிருந்து காப்பாற்றப்பட்டன.
இவ்வாறு ஒரே நபருக்கு மூன்று முக்கிய உறுப்புகளில் இரத்தக் கட்டிகள் உருவாவது மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும். குறிப்பாக, ஒரு இளம் வயதினருக்கு இரண்டாவது முறையாக பக்கவாதமும், அதனுடன் ஒரே நேரத்தில் பல உறுப்புகளில் இரத்த உறைவும் ஏற்படுவது என்பது மிகவும் விதிவிலக்கான, அரிதான மருத்துவ நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இந்த சிகிச்சையை வெற்றிகரமாக வழங்கிய மருத்துவக் குழுவில், நரம்பியல் துறை இயக்குநர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் பிரபாஷ் பிரபாகரன், மூத்த நரம்பியல் ஆலோசகர் டாக்டர் விவேக் ஐயர் மற்றும் சிம்ஸ் மருத்துவமனையின் இடையீட்டு நரம்பியல் பிரிவின் முதுநிலை மருத்துவர்களான டாக்டர் ரிதேஷ் ஆர். நாயர் மற்றும் டாக்டர் எஸ். செல்வின் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இது குறித்து டாக்டர் விவேக் ஐயர் பேசுகையில், “இந்த நோயாளிக்கான பாதிப்பும், சிகிச்சையும் மருத்துவ ரீதியாக ஒரு பெரிய சவாலாக இருந்தது. நாங்கள் எதிர்கொண்ட மிகவும் சிக்கலான மருத்துவச் சூழல்களில் இதுவும் ஒன்று. அந்நோயாளிக்கு இருந்த உடனடி ஆபத்தை நீக்குவதற்கும், நீண்ட கால அடிப்படையில் நல்ல சிகிச்சை விளைவை உறுதி செய்வதற்கும், பல்வேறு துறைகளைச் சார்ந்த மருத்துவர்களின் ஒருங்கி ணைந்த அணுகு முறை தேவைப்பட்டது” என்றார்.
நரம்பியல் துறையின் இயக்குநரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். பிரபாஷ் பிரபாகரன் பேசுகையில், “பக்கவாதம் எந்த வயதினருக்கும் ஏற்படலாம். அதன் அறிகுறிகளை அறிந்திருப் பதும், சரியாக அடையாளம் காண்பதும் மிக அவசியம். தனக்கு பக்கவாதம் ஏற்பட்டிருப்பதன் ஆரம்ப அறிகுறிகளைச் சரியாக அடையாளம் கண்டு, தாமதிக்காமல் மருத்து வமனைக்கு வந்தது, அவருக்குத் தகுந்த சிகிச்சை யை உடனடியாக வழங்க எங்களுக்குப் பெரி தும் உதவியது” என்று கூறினார்.
சிம்ஸ் மருத்துவ மனையின் இடையீட்டு நரம்பியல் பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர் ரிதேஷ் ஆர். நாயர் கூறியதாவது: தடைகளின்றி இரத்த ஓட்டத்தைச் சீராக்குவதே எங்களின் உடனடி இலக்காக இருந்தது. அவரது காலில் இருந்த இரத்த உறைவுக் கட்டிக்கான அறுவை சிகிச்சை மிக முக்கியமானது.
அதேசமயம், இதயம் மற்றும் மூளையில் இருந்த கட்டிகளுக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. இடையீட்டு நரம்பியல் சிகிச்சைத் துறை அடைந்துள்ள மாபெரும் முன்னேற்றத்தையும், இத்தகைய சிக்கலான, பல உறுப்புகளைப் பாதித்த இரத்தக் கட்டிகளைக் கையாள இந்த சிகிச்சை முறைகள் எவ்வளவு திறம்படப் பயன்படுகின்றன என்பதையும் இந்த நிகழ்வு தெளிவாக வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



