fbpx
Homeபிற செய்திகள்சீமான் கருத்து ஏற்புடையது அல்ல!

சீமான் கருத்து ஏற்புடையது அல்ல!

மணிப்பூர் கலவரம் தொடர்பாக கடந்த 30-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், வழக்கம்போல ஆவேசமாகப் பேசினார். “இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள்” என சீமான் பேசினார். திமுகவையும், காங்கிரஸையும் ஆதரிப்பதால் அவர்கள் சாத்தானின் பிள்ளைகள் என அவர் குறிப்பிட்டார்.

சீமானின் இந்த பேச்சு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் வேதனையையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து, தனது கருத்துக்கு விளக்கம் தருகிறேன் என்ற பெயரில் சீமான் நேற்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலும் அதே கருத்தையே பிரதிபலித்தார். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் கிடையாது என குண்டை தூக்கிப் போட்டதோடு, மொழி அடிப்படையில் அவர்கள் பெரும்பான்மையினர் என்றும், இனி யாராவது இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை சிறுபான்மையினர் எனக் கூறினால் செருப்பை கழட்டி அடிப்பேன்” என சப்பைக்கட்டு கட்டினார்.

சீமானின் இந்தப் பேச்சும் சர்ச்சையாகி, அதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
சீமானின் இந்தப் பேச்சு சிறுபான்மை மக்களின் உரிமையை தட்டி பறிக்க பார்க்கும் ஒரு முயற்சியே என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் சிறுபான்மை என்கிற சட்ட பாதுகாப்பினை அண்ணல் அம்பேத்கர், ஆசாத், காயிதே மில்லத் போன்றவர்கள் போராடித்தான் பெற்றுத் தந்தனர். சீமான் போன்றவர்கள் வீராப்பு வசனம் என நினைத்து சிறுபான்மையினரின் சட்ட பாதுகாப்பு மற்றும் உரிமைகளை நீர்த்து போகச் செய்ய முயற்சிப்பது நியாயமல்ல.

இந்திய அரசியல் சட்டத்தில் மதத்தால் சிறுபான்மை என்கிற சிறப்பு சட்ட பிரிவினை நீக்க வேண்டும் என்றும், சிறுபான்மை என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் அதிகப்படியான உரிமைகளை அனுபவிக்கின்றனர் எனவும் ஆர்எஸ்எஸ் வலியுறுத்தி வருகிறது.

சிறுபான்மை என்கிற வார்த்தை அரசியல் சட்டத்தில் கூடாது என்பதுதான் ஆர்எஸ்எஸ் வாதம். அதே வாதத்தைத் தான் இன்று சீமானும் முன்வைத்திருக்கிறார்.

சீமான் அவர்களே…ஆவேசமாக பேசினால் மட்டும் போதாது, விவேகத்துடன் நிதானமாக யோசித்து பேச வேண்டும்.

சிறுபான்மையினர் குறித்தான சீமானின் கருத்து கொஞ்சம்கூட ஏற்புடையது அல்ல!

படிக்க வேண்டும்

spot_img