கோவை பாலாஜி மூளை, நரம்பியல் மற்றும் மனநல மருத்துவ மையத்தின் மனநல மருத்துவர் டாக்டர் என்.எஸ். மணி கூறியதாவது:
உலக மனநல தினம் அக்டோபர் 10-ம் தேதி (இன்று) கடைப்பிடிக்கப்படுகிறது. 2026-ம் ஆண்டின் கருப்பொருளாக, “வாழ்ந்த அனுபவங்கள் கேட்கப்படட்டும்; உண்மையான குரல்கள், உண்மையான மாற்றம்” வலியுறுத்தப்படுகிறது.
மனநலம் என்பது மனநோய் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல; உணர்வுகளைப் புரிந்துகொண்டு, வாழ்க்கைச் சவால்களை எதிர்கொண்டு, நம்பிக்கையுடன் வாழ்வதும் ஆகும்.
மனச்சோர்வு, பதற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டவர்களின் அனுபவங்களைக் குறை கூறாமல், தீர்ப்பு வழங்காமல் கேட்பது அவசியம். குறிப்பாக, கல்வி அழுத்தம், வேலைவாய்ப்பின்மை, சமூக ஊடகப் பாதிப்புகள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு குடும்பத்தினரும் சமூகமும் உரிய ஆதரவு அளிக்க வேண்டும்.
ஒவ்வொருவரின் மனநலத் தேவைகளும் மாறுபடும் என்பதால், அவர்களின் அனுபவங்களையும் உரிமைகளையும் மதித்து உதவ வேண்டும். மனநல உதவியை நாடுவது இயல்பானது என்ற எண்ணத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு டாக்டர் என்.எஸ். மணி தெரிவித்துள்ளார்.



