fbpx
Homeபிற செய்திகள்மோசடிகளுக்கு முளையிலேயே சமாதி கட்ட வேண்டும்!

மோசடிகளுக்கு முளையிலேயே சமாதி கட்ட வேண்டும்!

இன்றைக்கு பொதுவெளி மற்றும் இணையவெளி என எங்கு பார்த்தாலும் விதவிதமாக நிதி மோசடிகள் அரங்கேறி வருகின்றன. எம்.எல்.எம் என்ற மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங், காந்தப்படுக்கை, ஈமு கோழி என ஆரம்பித்து, சமீபத்தில் பூதாகரமாக வெளிவந்த ஆருத்ரா, நியோமேக்ஸ் வரை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. சைபர் கிரைம் மோசடிகளும் ரகரகமாக நடந்து வருகின்றன.

மோசடிகள் அம்பலத்துக்கு வந்தாலும், அடுத்தடுத்து புதுப்புது வழிகளில் மக்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். மோசடிக்காரர்கள் ஒரு முறை மட்டும் கைவரிசை காட்டிவிட்டு ஓய்ந்து போவதில்லை. கைதாகி சிறையில் அடைக்கப்பட்டாலும் ஜாமீனில் வெளியே வந்து அல்லது தண்டனை காலம் முடிந்ததும் மீண்டும் இன்னொரு வகை மோசடியில் ஈடுபடுகிறார்கள்.

அதற்கு முக்கியக் காரணம், அரசுகளும் ரிசர்வ் வங்கியும் ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வை மக்கள் காதில் வாங்கிக் கொள்வதில்லை என்பது மட்டுமல்ல, மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு இதுவரை கடுமையான தண்டனை வழங்கப்படவில்லை என்பதும் ஆகும்.

இத்தகைய மோசடிகள் குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் இடித்துரைத்திருக்கிறது. ரூ.13 லட்சம் மோசடி வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, “மோசடிகள் தொடர்கின்றன. இதுபோல் பதிவாகியுள்ள பல நூறு மோசடி வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் நிலுவையிலேயே வைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கேட்டு ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கிறது. இது மிகவும் வேதனையைத் தருவதாக இருக்கிறது” என்று சாடியுள்ளார்.

பொருளாதாரக் குற்றப்பிரிவோ, காவல்துறையோ வழக்குகளை கிடப்பில் போடும் போது பாதிக்கப்பட்டவர்கள் மேலும் ஏமாற்றத்திற்கு ஆளாகின்றனர்.
அதனால் தான் நீதிமன்ற வாசலை அவர்கள் தட்டுகிறார்கள். ஏனென்றால் அங்கே தான் நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

அதிலும் வழக்குகளுக்குச் செலவு செய்ய பண வசதியும் நேரமும் இருப்பவர்கள்தான் இப்படி நீதிமன்றத்தை நாடமுடிகிறது. சம்பாதிக்கும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக மோசடிக்காரர்களிடம் பறிகொடுத்து விட்டு புலம்பும் சாமான்ய ஏழை, எளிய மக்களால் எப்படி நீதிமன்றத்தை நாட முடியும்? எல்லா பாதிப்புகளுக்கும் மக்கள் நீதிமன்றங்களை நாடுவது என்பது இயலாத காரியம்.

பொருளாதாரக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது, மோசடிப் பேர்வழிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்வது… இந்தப் பணிகளை எல்லாம் செம்மையாக செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.

குறிப்பாக, காவல்துறை அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி பெற்றுத் தருவதை உறுதிப்படுத்த வேண்டும். அதோடு உளவுத் தகவல்கள் மூலம் மோசடிக்காரர்களை ஆரம்பத்திலேயே கண்காணித்து குற்றம் நிகழ்வதைத் தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அதிரடி காட்டுவது மிகமிக அவசியம்; அவசரம்.

மோசடிகளுக்கு முளையிலேயே சமாதி கட்ட வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img