முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானதை அடுத்து போயஸ் தோட்டத்தில் அவர் வசித்து வந்த வீடு அரசுடமையாக்கப்பட்டது. இப்போது அது நினைவு இல்லமாக மாறியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் மகள் தீபாவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து அவ்வீடு இவர்கள் இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது.
இதனால் பல ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் போயஸ் தோட்டத்தில் ஒன்றாக வசித்து வந்த சசிகலா, வேதா இல்லம் என்று அழைக்கப்பட்ட அந்த வீட்டில் இருந்து வெளியேற நேரிட்டது.
எனினும், ஜெயலலிதாவின் வீட்டுக்கு அருகிலேயே நிலம் வாங்கி அதில் பல கோடி ரூபாய் செலவில் சொந்த வீடு கட்டியுள்ளார் சசிகலா. நேற்று (புதன்கிழமை) காலை புதுமனை புகுவிழா நிகழ்வு நடைபெற்றதை அடுத்து, சசிகலா உற்சாகத்துடன் காணப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், இதுவரை அமைதியாக தமிழக அரசியல் போக்கை கவனித்து வந்த சசிகலா, இனி முழுவீச்சில் காய்களை நகர்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. புது வீட்டில் இருந்தபடி அவர் தமது அரசியல் நடவடிக்கைகளை வேகப் படுத்துவார் என்ற செய்தி, தமிழ்நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.
முதற்கட்டமாக, பிளவுபட்ட அதிமுகவை இணைப்பதற்கான முயற்சியை அவர் மேற்கொள்வார் என்றும் நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் அவர் மீண்டும் ஓர் அரசியல் சக்தியாக உருவெடுப்பார் என்றும் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.
சசிகலா இதுவரை அதிமுகவை ஒருங்கிணைப்பேன், அது தன்னால் முடியும் என்று தான் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். அதற்கான சாத்தியக்கூறு கொஞ்சம் கூட தென்படவில்லை.
சசிகலாவிற்கு ஓ.பன்னீர்செல்வமும் டிடிவி.தினகரனும் முழு ஒத்துழைப்புத் தருவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ சசிகலாவை ஒருபோதும் ஏற்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
அதிமுக தலைமைப் பொறுப்பை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்க அவர் விரும்பவும் மாட்டார்.
சசிகலாவை உள்ளே
விட்டால் தான் வெளியே
என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா என்ன? சசிகலா தீவிர அரசியலில் இறங்கினாலும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தரையில் விழுந்து ஒருபோதும் தவழ மாட்டார்.
ஆனால் அதிமுகவில் தற்போதிருக்கும் சிறிய பிளவை, சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் தாங்கள் சார்ந்திருக்கும் சமூகத்தினரின் வாக்குகள் மூலம் பெரிய பிளவாக உருமாற்றம் செய்ய முடியும் என்ற கணக்கை மனதில் கூட்டிக் கழித்து வருகின்றனர்.
வெளிப்படையாக சொல்லா விட்டாலும் அரசியலைப் பொறுத்தவரை இது சாத்தியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை, தோழி ஜெயலலிதா பெயரால் கைப்பற்றும் அளவிற்கு சசிகலாவால் விஸ்வரூபம் எடுக்க முடியுமா? அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக வாக்கு வங்கியை பிரிக்கும் போட்டி அரசியலில் இறங்குவாரா?
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!