2024 நாடாளுமன்றத் தேர்த லுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. மத்தியில் கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள மோடி தலைமையிலான ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் பாஜக இறங்கி இருக்கிறது.
மறுபக்கம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற முடிவு செய்து வேறுபாடுகளை மறந்து ஒரே கூட்டணியாக போட்டியிட முடிவு செய்து இருக்கின்றன. இதற்காக கடந்த மாதம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் கூட்டப்பட்ட நிலையில், நேற்றும், நேற்று முன்தினமும் பெங்களூருவில் 2வது முறையாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டு உள்ளது.
அதே சமயம் நேற்று தலைநகர் டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்று உள்ளார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் ஜான் பாண்டியன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உள்ளனர்.
இந்த கூட்டத்தில் மண்டல வாரியாக பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற னர். அதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தென்னிந்திய பிரதிநிதியாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தார்.
அதை தொடர்ந்து நடைபெற்ற போட்டோ ஷூட் மற்றும் கூட்டத்திலும் பிரதமர் மோடிக்கு அருகே எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. அதேபோல், கூட்டணி தலைவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்திலும் எடப்பாடி பழனிசாமி முதல் வரிசையில் நின்றதை காண முடிந்தது. முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமியை ஓட்டல் வாசலுக்கே வந்து ஜேபி நட்டா வரவேற்றார்.
எடப்பாடி பழனிசாமிக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்?
கடந்த ஆண்டு ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் அமித்ஷா ஆபரேசன் சவுத் திட்டத்தை அறிவித்தார். ஆனால், தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவிலும் ஆட்சியை இழந்தது. மறுபக்கம் தமிழ்நாட்டின் பிரதான கட்சியான அதிமுகவுக்கு பாஜகவுக்கும் (அண்ணாமலைக்கும்) இடையே மோதல் போக்குகள் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் அதிமுகவின் ஆதரவு பாஜகவுக்கு தேவைப்படுகிறது.
அதனால் அக்கட்சியை தொடர்ந்து கூட்டணியில் தக்க வைக்க எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக முக்கியத்துவம் தந்திருக்கிறது. அவரை உச்சந்தலையில் கிலோ கணக்கில் ஐஸ் வைத்து அழகு பார்த்திருக்கிறது பாஜக.
ஆம், அது தான் உண்மை.
பாவம்…ஓ.பன்னீர்செல்வம்!