2019 மக்களவைத் தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுப்பெயராக இருப்பது எப்படி” என்று பேசினார்.
இந்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. எம்.பி. பதவியில் இருந்து அவர் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார் என்ற தகவல் வெளியான நிலையில் அதிர்ச்சியான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற தீர்ப்பையடுத்து, வயநாடு மக்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தியைத் தகுதிநீக்கம் செய்து மக்களவை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.
இதனை நாங்கள் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம் என காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது. “நாங்கள் தொடர்ந்து அதானி விவகாரம் குறித்து விசாரணை கோரிக்கையை வைப்போம்.
ஜனநாயகத்தை காப்பாற்ற சிறை செல்வோம்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி ட்விட்டரில், “நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன். இதற்காக எல்லா விலையையும் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் இருந்து கண்டனக் கணைகள் பாய்ந்தாலும் நீதிமன்றம் தண்டனையை வழங்கி உள்ளது. அதனைச் சட்டபூர்வமாகத்தான் எதிர்கொள்ள வேண்டிய நிலை ராகுல்காந்திக்கு ஏற்பட்டுள்ளது.
சட்ட நிபுணர்களின் கூற்றுப்படி, இது ஒரு கிரிமினல் வழக்கு என்பதால், ராகுல் காந்தி நேரடியாக உயர் நீதிமன்றத்தையோ அல்லது உச்ச நீதிமன்றத்தையோ அணுக முடியாது. அவர் முதலில் குஜராத் செஷன்ஸ் கோர்ட்டிலும் பின்னர் குஜராத் உயர்நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
இதற்கிடையில், ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி மற்றும் வயநாட்டில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியா முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல்காந்திக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது. இதனை ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாகவே எதிர்க்கட்சிகள் பார்க்கினறன.
அனைத்துக் கட்சித் தலைவர்களும் ராகுல் காந்திக்கு ஆதரவுக் கரம் நீட்டி இருக்கிறார்கள். ராகுலைப் பார்த்து எந்தளவுக்கு பா.ஜ.க. தலைமை பயந்து இருக்கிறது என்பது இதன்மூலம் தெரிகிறது.
அவரது இந்திய ஒற்றுமைப் பயணம் இந்திய மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் இதற்குக் காரணம் ஆகும் என்று மு.க.ஸ்டாலின் கூறி இருப்பது உற்றுநோக்கத்தக்கது.
ராகுல் மீதான இந்த நடவடிக்கை தங்களுக்கு சாதகமாக இருக்கும், 2024 தேர்தலில் கைகொடுக்கும் என பாஜக நம்புகிறது. ஆனால் ராகுல்காந்திக்கு மோசடி வழக்கிலோ ஊழல் வழக்கிலோ தண்டனை வழங்கப்படவில்லை, அதுவே ராகுல்காந்திக்கு அனுதாப அலையாக மாறி காங்கிரசுக்கு கை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் நியாயமானது தானே.
ராகுல்காந்தி மீண்டெழுந்து நாடாளுமன்றத்திற்குள் மீண்டும் நுழைய வேண்டும் என்பதே ஜனநாயகவாதிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!



