கோவை ஆயுதப்படையில் பணிபுரியும் போலீசார் இன்று சாலையில் பேரணியாகச் சென்று திரும்பி, காவல் வனத்தைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கோவை மாநகரில் பணியாற்றும் போலீசாரின் மன நலனையும், உடல் நலனையும் பேணும் வகையில், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
போலீசார் மற்றும் அவர்களது குடும் பத்தாருக்கு யோகா பயிற்சி, புத்தகக் கண்காட்சி, கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, ஆயுதப்படையில் பணியாற்றும் ஆண், பெண் போலீசார் இன்று அதிகாலை முதலே, நடைபயிற்சி மற்றும் பேரணி சென்றனர்.
இதனைத் தொடர்ந்து ஆயுதப்படை வளாகத்தில் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காலை எழுந்ததும், விவசாயிகளை போல் பணியைத் தொடங்கியது மன நிறைவை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை உதவி ஆணையர் சேகர் உட்பட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.