தந்தை பெரியார் நூறு ஆண்டுகளுக்கு முன் சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்தினார். – இடையில் தடை ஏற்பட்டாலும், நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் உச்சநீதிமன்றம் அதனை அங்கீகரிக்கிறது.
‘இந்து திருமணச் சட்டம் 1955-இன்படி, வழக்குரைஞர்களின் அலுவலகத்தில் செய்யப் படும் திருமணங்கள் செல்லாது என சில மாதங்களுக்குமுன் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
தற்போது வழக்குரைஞர்கள் அலுவ லகத்திலும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம்‘ என்று மிக அருமையான, முற்போக்கான, மனித சமத்துவம், மனிதநேயத்துடன் கூடிய தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
தந்தை பெரியார் அறிமுகம் செய்த திருமண முறை என்பது, எளிய முறையில் இரண்டு சாட்சியங்களோடு நடத்திக் கொள்ளலாம் என்பது தான். ஆண் – பெண் சமத்துவம், சம உரிமை, சமவாய்ப்பு, ஜாதி, மதச், சடங்குகளுக்கு இடமில்லாத ஒருவித அன்பும், புரிதலும் மிக்க எளிய மணமுறைதான், சுயமரியாதைத் திருமண முறை.
இந்தத் திருமண முறை செல்லாது என்று 1953 இல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பை சற்றும் பொருட்படுத்தாமலேயே பல்லாயிரக்கணக்கான- சுயமரியாதைத் திருமணங்கள் தொடர்ந்து நடந்தே வந்தன.
1967 இல் சுயமரியாதைத் திருமணத்துக்கு சட்ட வடிவம் கொடுத்தார் அறிஞர் அண்ணா. 1967ல் பதவியேற்ற அறிஞர் அண்ணா தலைமையிலான அரசு சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என ஒருமனதாக சட்டமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றி, புதிய வரலாறு படைத்தது.
திருப்பூரில் 2023 இல் வழக்குரைஞர்கள் முன்னிலையில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை -உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில், ‘‘வழக்குரைஞர்கள் அலுவலகத்தில் நடைபெற்ற திருமணம் செல்லும்; சுயமரியாதைத் திருமணத்தை எங்கும், எவர் முன்னிலையிலும் நடத்திக் கொள்ளலாம்‘’ என்ற மிக முற்போக்கான தீர்ப்பை நீதிபதிகள் ரவீந்திர பட், அரவிந்த் குமார் ஆகியோர் மிக அருமையான தீர்ப்பைத் தந்துள்ளனர்.
தந்தை பெரியார் அன்று சொன்னார் – உச்சநீதிமன்றம் இன்று சொல்லுகிறது. பெரியார் – திராவிடர் கொள்கை என்றும் வெல்லும் என்பதற்கு இத்தீர்ப்பு கட்டியம் கூறுகிறது.
இது பாராட்டத்தக்க நல்ல தீர்ப்பாகும்- வரவேற்போம்!