fbpx
Homeபிற செய்திகள்உடல் உறுப்புகள் தானத்தில் தமிழ்நாடே முன்னோடி மாநிலம்!

உடல் உறுப்புகள் தானத்தில் தமிழ்நாடே முன்னோடி மாநிலம்!

இன்று உலக உடல் உறுப்பு தான தினமாகும். மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கு புதிய வழிகளைத் திறந்து வைத்துள்ளன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று உடல் உறுப்பு தானம். ஒருவர் உயிருடன் இருக்கும்போது அல்லது மூளைச் சாவடைந்ததற்குப் பிறகு தனது உறுப்புகளை மற்றவர்களுக்கு வழங்குவதே உறுப்பு தானம் ஆகும். ஒருவரின் உறுப்புகளை தானமாக வழங்குவது, மற்றவர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க உதவுகிறது.

இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல், கண்கள், தோல் உள்ளிட்ட பல உறுப்புகள் மற்றும் திசுக்களை தானமாக வழங்கலாம். இந்த உறுப்புகள், உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வாழ்க்கையை அளிக்கின்றன. இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். ஆனால், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், தேவையான உறுப்புகள் கிடைப்பது பெரும் சவாலாக உள்ளது.

இந்த இடைவெளியைக் குறைக்க, உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மக்களின் பங்களிப்பு அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் 2008ம் ஆண்டு முதல் முறையாக உடல் உறுப்பு தானம் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அறிமுகம் செய்தார். 2008ம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை வெறும் 7 ஆகத் தான் இருந்தது. அதன் பிறகு படிப்படியாக அதிகரித்து வந்த உடல் உறுப்பு தானம், கொரோனா தொற்று காலத்தில் மட்டும் குறைந்தது.

2023ம் ஆண்டு முதல் உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கடந்த ஆண்டு (2024) உச்சத்தை தொட்டது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஒரு முக்கிய அறிவிப்பு காரணமாக அமைகிறது. அது உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு 2023 செப்டம்பர் முதல் மூளைச்சாவு அடைந்த நிலையில் உடல் உறுப்பு தானம் பெறப்படும் நபர்களின் உடலுக்கு அவர்களின் இறுதி சடங்குகளின் போது அரசு மரியாதை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு தான். இது சமுதாயத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இது வரை 484 பேர் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட பிறகு ‘மரியாதை அணிவகுப்பு’ நடத்தப்பட்டது. உறுப்புகளை தானம் செய்தவரின் உடலை, ஆம்புலன்ஸிற்கு மாற்றும் வரை மருத்துவர்கள், மருத்துவக் குழுவினர் அந்த அணிவகுப்பை நடத்தி மரியாதை செய்தனர்
.
தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்புக்கு கிடைத்த வரவேற்பு எதிரொலியாக தமிழ்நாட்டில் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சைகள் அதிகரித்தது. அதுமட்டுமின்றி, சட்டமன்ற அறிவிப்பு படி விரைவில் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் மேற்கொள்பவர்கள் பெயர் பதிய ஒரு சுவர் அமைக்கப்பட உள்ளது. அது ‘மாரியாதை சுவர்’ (HONOR BOARD) என்று அழைக்கப்பட உள்ளது.

2024ல் அதிக அளவில் உடல் உறுப்புகளை தானமாக பெற்று தமிழ்நாடு சாதனை படைத்தது. 2024ல் மொத்தம் 268 நன்கொடையாளர்களிடம் இருந்து 1,500 உடலுறுப்புகள் மற்றும் திசுக்கள் தானமாக பெறப்பட்டுள்ளது. பிறமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது அதிகபட்ச எண்ணிக்கை ஆகும்.

மூளை சாவு ஏற்பட்ட நபர்களிடம் இருந்து உறுப்பு பெறுவதில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. சீரிய நடவடிக்கை காரணமாக இந்த திட்டத்திற்காக ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாடு அரசு விருது பெற்றுள்ளது.

இந்த உடல் உறுப்பு தானம் மேற்கொள்பவர்களுக்கு அரசு மரியாதை என்ற திட்டத்தை ஒடிசா, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் பின்பற்றுகின்றன. தமிழக மக்களிடையே விழிப்புணர்வு சற்று அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் மூளை சாவு அடைந்த உடன் உறுப்பு தானம் செய்கிறார்கள்.

இருப்பினும் இன்னும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. மூளைச் சாவு அடைந்தவர்கள் உறுப்பு மண்ணுக்கு அல்லது நெருப்புக்கு செல்லாமல் மற்றவர்களுக்கு உதவும் என்ற தகவல் நாட்டு மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img