சென்னையில் கியா இந்தியா நிறுவனம், தனது பிரீமியம் எஸ்யூவி மாடலான செல்டோஸின் புதிய GTX(O) மற்றும் X-Line(O) வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.21.56 லட்சம் (எக்ஸ்- ஷோரூம்) ஆரம்ப விலையில் வெளியாகியுள்ள இந்த மாடல்களில் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன. பாரத் NCAP-இன் 5 நட்சத்திர பாதுகாப்பு தரத்தை பெற்றுள்ள இந்த மாடலில், 28 அம்சங்களைக் கொண்ட ADAS F+ பாதுகாப்பு அமைப்பு, ஸ்மார்ட் க்ரூஸ் கட்டுப்பாடு, மோதல் தடுப்பு, பாதை மாற்ற உதவி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், கியா கனெக்ட் 2.0, டிஜிட்டல் சாவி, ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஸ்மார்ட் ஏர் பியூரிஃபையர், தானியங்கி வைப்பர்கள், டாஷ்கேம் உள்ளிட்ட பிரீமியம் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. புதிய வேரியண்ட்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் பாதுகாப்பான மற்றும் பிரீமியம் ஓட்டுநர் அனுபவத்தை வழங்கும் என கியா இந்தியா தெரிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் மூத்த துணைத்தலைவர் அதுல் சூட் கூறுகையில், “வாடிக்கையாளர்களின் மாறிவரும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செல்டோஸ் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.



