அ.தி.மு.கவின் ஓ.பி.எஸ். தரப்பினர் திடீரென சென்னையில் செய்தியாளர் களைச் சந்தித்தனர். இச் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில், முதலில் வைத்தியலிங்கம் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில் கொடநாடு வழக்கின் பின்னணியைத் தீவிரமாக விவரித்ததோடு, அதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஆகஸ்டு 1ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தார்
திடீரென இபிஎஸ்&க்கு எதிரான ஒரு போராட்டத்தை ஓபிஎஸ் அறிவித்ததற்கு என்ன காரணம்? தி.மு.க. தூண்டுதல்தான் காரணம் என்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அ.தி.மு.க. குறித்து மக்கள் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறார்.
அவரால் அ.தி.மு.கவை நேரடியாக எதிர்க்க முடியாது என்பதால் தி.மு.கவின் பின்னால் ஒளிந்துகொண்டு இதைச் செய்கிறார் என ஜெயக்குமார் மேலும் தெரிவித்துள்ளார்.
இது அப்பட்டமான பொய் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்து. ஏனென்றால் இந்த வழக்கு விசாரணையில் திமுக அரசு மெத்தனம் காட்டுகிறது என்பதாகக் குற்றம்சாட்டி அதனையும் கண்டித்தே ஓபிஎஸ் தரப்பு போராட்டம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில் அதாவது, ஜூலை 11ஆம் தேதி அ.தி.மு.கவின் பொதுக்குழு கூடி, எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராக நியமித்தது. ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கட்சியைவிட்டு நீக்கப்பட்டனர்.
ஆகவேதான் இந்த நாளில், எடப்பாடி தரப்புக்கு நெருக்கடி கொடுக்க இந்த விவகாரத்தை அவர் கையில் எடுத்திருக்கலாம் என்கிறார்கள் சிலர். தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக, எடப்பாடி பழனிசாமி ஜூலை 10ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்ட நிலையில், அதற்கு அடுத்த நாளே எடப்பாடி தரப்பு மீது பரவலான சந்தேகம் விழுந்திருக்கும் ஒரு சம்பவத்தை ஓ.பி.எஸ். கையில் எடுத்திருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஒரு வருடமாகவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பைப் பொறுத்தவரை, தொடர்ந்து பின்னடைவையே சந்தித்துவருகிறது. அ.தி.மு.க. மீதான உரிமை விவகாரத்தில், ஒரே ஒரு உரிமையியல் வழக்கைத் தவிர, மற்ற வழக்குகள் அனைத்தும் எடப்பாடி தரப்புக்கே சாதகமாக முடிந்திருக்கின்றன.
ஓபிஎஸ் கட்சியைவிட்டு நீக்கப்பட்ட இந்த ஒரு வருடத்தில், எடப்பாடி தரப்பிலிருந்து பெரிய எண்ணிக்கையில் யாரும் இவர் பக்கம் வரவில்லை. இந்த நிலையில், கொடநாடு வழக்கு துரிதப்படுத்தப்பட்டு, அதன் மூலம் எடப்பாடி தரப்புக்கு சிக்கல் வந்தால், நிர்வாகிகளும் தொண்டர்களும் தன் பக்கம் வரலாம் எனக் கருதுகிறார் ஓ.பன்னீர்செல்வம்.
ஒரு அழுத்தம் கொடுத்து அதனால், வழக்கு துரிதமடைந்தால் நல்லது என்றும் அவர் கருதியிருக்கக்கூடும். மேலும், எடப்பாடி தரப்பு அறிவித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டிருக்கும் செய்தியும் தற்போது வெளியாகியிருக்கிறது.
மேலும், ஜூலை 15ஆம் தேதி நடக்கவுள்ள பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகள் கூட்டத்திற்கு எடப்பாடி தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
கிட்டத்தட்ட பா.ஜ.கவும் தன்னைக் கைவிட்டுவிட்டதாக பன்னீர்செல்வம் தரப்பு கருதுகிறது. இந்தப் பின்னணியில்தான், தமிழக அரசியலில் தன்னை நிலைநிறுத்தும் ஒரு முயற்சியாக செய்தியாளர்களைச் சந்தித்து, கொடநாடு விவகாரத்தைக் கையில் எடுத்து போராட்டத்தை அறிவித்து இருக்கிறாரோ ஓ.பி.எஸ்?