அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நேற்றைய இறுதி நாள் வாதங்கள் – நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளின் அடிப்படையில் பார்த்தால், குறிப்பிட்ட ஒருவரின் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கூறப்படுகிறது. உச்சகட்ட வாதங்களின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல முக்கியமான கேள்விகளை எழுப்பினர்.
அதிமுக கட்சி விதிகளிலேயே தெளிவான புரிதல் இல்லை, இப்படி நீதிமன்றங்களிலேயே வழக்கு நடத்திக் கொண்டிருந்தால் கட்சிப் பணிகளை எப்படி கவனிப்பீர்கள்? என ஓபிஎஸ்,- ஈபிஎஸ் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இறுதி வரை கட்சி விதிகள் தொடர்பாக இரு தரப்பும் எடுத்து வைத்த வாதங்களில் நீதிபதிகள் திருப்தி அடையவில்லை என்றே தெரிகிறது.
நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வில் தொடர்ந்து வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பும் தங்கள் வாதங்களை 16ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதால், அதன் பிறகே தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. எனினும், இந்த மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, ஜூலை 11 பொதுக்குழு பற்றி விசாரித்த நீதிபதிகள், பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸை நீக்குவதாக அஜெண்டாவே இடம்பெறாத நிலையில் எவ்வாறு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் நீதிபதிகள் கேட்ட சில கேள்விகள்: ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு வரை இருவரும் இணைந்து செயல்பட்டதில் எந்த பிரச்சனையும் இல்லை.
அதன்பிறகுதான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது அப்படித்தானே? கட்சியின் விதிகளை மாற்றவோ, திருத்தவோ, நீக்கவோ எந்த அமைப்பால் முடியும்?. இருவரும் இணைந்து செயல்பட இயலாத சூழல் வரும்போது என்ன செய்வது?அதிமுக கட்சி விவகாரம் தொடர்ந்து நீதிமன்றங்களிலேயே இருந்தால் கட்சி பணிகளை எவ்வாறு நிர்வகிப்பீர்கள்?.
இரு தலைமைப் பதவிகளில் ஒரு பதவியில் இருப்பவருக்கு அதில் தொடர விருப்பமில்லை என்றால் என்ன செய்வீர்கள்?. இப்படி முக்கியமான கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.
நேற்றைய இறுதி நாள் விசாரணையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள், தெரிவித்த கருத்துகள் மூலம், ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரில் ஒருவருக்கு கட்சியின் உரிமையை வழங்கும் வகையில் தீர்ப்பு வருவதற்கான சாத்தியமில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இதனால், பொதுச்செயலாளர் தேர்தலை ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலைப்படி உள்ள அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்தல் நடத்தி தீர்வு காணுங்கள் என்றே உத்தரவு வருவதற்கான வாய்ப்புகளே அதிகம் எனக் கூறப்படுகிறது.
எனினும், உச்ச நீதிமன்ற உத்தரவை இரு தரப்பும் தீவிரமாக எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
நாமும் தீர்ப்புக்காகக் காத்திருப்போம்!



