ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது. வழக்கமாக ஒரு மசோதா இரண்டாவது முறை நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டால் ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்.
அதன் காரணமாக ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கலாம் என பேசப்படுகிறது. இருப்பினும் பல்வேறு அரசியல் கணக்குகள் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
இதை அரசியல் அழுத்தத்திற்கு பிறகான முடிவு என்று தான் பார்க்க வேண்டும்.
ஏனெனில் இரண்டாவது முறை நிறைவேற்றி மசோதாவை அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலக்கெடு என்பது இல்லை. அப்படி இருக்கையில் இந்த திடீர் ஒப்புதலுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆளுநரை கடிந்து கொண்டது முக்கிய காரணம். ஏனெனில் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் மத்திய அரசுக்கு திருப்தி இல்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆளுநர்கள் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவது தான் நிதர்சனமாக உள்ளது. அதேசமயம் அவர்கள் பதவியேற்பு உறுதிமொழியை மீறி நடந்து கொள்வதை மத்திய அரசு ரசிக்காது. ஆளுநருக்கு எதிரான போக்கு என்பது கடைசியில் மத்திய அரசு மீது தான் பிரதிபலிக்கும். எனவே சில விஷயங்களை தவிர்க்கலாம் என டெல்லி நினைக்கிறது.
பிரதமர் மோடி சமீபத்தில் சென்னை வந்திருந்த போது, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் சரியாக பேசவில்லை. இதனால் அவர் வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்டதாக சொல்லப்பட்டது.
இத்தகைய நிலையில் ஆளுநர் மாற்றப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற பேச்சும் அடிபடுகிறது. டெல்லியை பொறுத்தவரை 2024 மக்களவை தேர்தலைத் தான் பிரதான விஷயமாக எடுத்துக் கொண்டு காய்களை நகர்த்தி வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் அடிமட்ட வேலைகளை செய்து வருகின்றனர்.
ஒருவேளை தேர்தல் முடிவுகளில் பின்னடைவு ஏற்பட்டு பெரும்பான்மை எண்ணிக்கை குறைந்தால் நிபந்தனை அடிப்படையில் மாநில கட்சிகளிடம் ஆதரவை பெறலாம். அப்படி பார்த்தால் திமுக கூட வெளியில் இருந்து ஆதரவு தரலாம்.
தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டிருக்கும் கையெழுத்து என்பது அவர் விரைவில் மாற்றம் செய்யப்படுவதற்கான சிக்னலாக கூட இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். நடப்பது நடக்கட்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்திருந்தால் அதன் பின் நிகழ்ந்த 21 தற்கொலைகளை தவிர்த்திருந்திருக்க முடியும். ‘
இனியாவது ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் முடிவுக்கு வரட்டும், அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டது. ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் இன்றே அமலுக்கு வந்து விட்டது.
ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுகள்!



