இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சட்டமன்றத்தின் பதவிக்காலம் காலாவதி ஆகும் காலத்திற்கு ஏற்ப தேர்தல் நடைபெறுகிறது.
இப்படி அடிக்கடி தேர்தல் நடைபெறுவதால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை எனக் கூறிய மத்திய பாஜக அரசு, நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நடப்பு நடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதால் தேர்தல் செலவீனம் குறைவதோடு வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும் என்று வாதிடப்படுகிறது. மத்திய அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்யும், பிராந்திய கட்சிகளின் மீது ஆதிக்கம் செலுத்தும், கூட்டாட்சித் தத்துவம் சிதைந்து போகும் என்பது போன்ற வாதங்கள் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்களால் முன்வைக்கப்படுகிறது.
ஒரேநாடு ஒரே தேர்தலை ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பல்வேறு சாதக பாதக அம்சங்கள் கூறப்படாலும், இதை அமல்படுத்துவதில் பல சவால்கள் உள்ளன. அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டியது அவசியம்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி இருந்தால்தான் இதை நிறைவேற்ற முடியும். அது மட்டும் இன்றி நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் இதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அதுமட்டும் இன்றி நாடு முழுக்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெருமளவில் தேவைப்படும். பாதுகாவலர்கள் எண்ணிக்கையும் அதிகம் தேவைப்படும். இதுபோன்ற பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
நாடாளுமன்றத்தில் இந்த மசோதா டிசம்பர் 16ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் இன்று அறிவித்துள்ளார். இந்த மசோதா நிறைவேறி எல்லாம் சரியாக நடந்தால் அடுத்த 2029-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
மெஜாரிட்டி மாநிலங்களின் ஆதரவு மத்திய பாஜக அரசுக்கு கிடைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் தற்போதய பாஜக கூட்டணி அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை என்பது கவனிக்க வேண்டியது.
மாறாக மற்ற மாநில கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்ற நினைத்தாலும். அது எளிதல்ல.. ஏனெனில் மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி என்பது 364 எம்பிக்கள் ஆதரவு தேவை.
தற்போதைய நிலையில் வெறும் 293 இடங்கள் மட்டுமே உள்ளது. எனவே இதற்கு இன்னமும் ஏராளமான எம்பிக்களின் ஆதரவு பாஜகவிற்கு தேவையாகும். சில கட்சிகளின் ஆதரவை பாஜக பெற்றாலும் 71 எம்பிக்களின் ஆதரவை பெறுவது என்பது எளிதான காரியம் இல்லை.
ஆனாலும் மசோதாவை தாக்கல் செய்யத் தேதி குறித்து விட்டது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு. இதில் இருக்கும் சவால்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதன் மூலம் ஒருமித்த கருத்தை அடைய முடியும் என மத்திய அரசு நம்புகிறது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை முறியடித்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறுமா?



