Homeபிற செய்திகள்இளைய உலகச் சதுரங்க வெற்றியாளர் குகேஷ்!

இளைய உலகச் சதுரங்க வெற்றியாளர் குகேஷ்!

உலகச் சதுரங்க வெற்றியாளராக வாகை சூடி வரலாறு படைத்துள்ளார், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் தொம்மராஜு. அவர் சென்னை அயனம்பாக்கம் வேலம்மாள் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்.

நான்கு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இறுதி சுற்றான பதினான்காம் ஆட்டத்தில் கறுப்புக் காய்களோடு குகேஷ் புரிந்த சாதனையை ஏராளமான ரசிகர்களை உள்ளடக்கிய சிங்கப்பூரின் செந்தோசா, ஈகுவாரியஸ் விடுதியின் நேரடி அரங்கம் மெய்சிலிர்த்து ஆரவாரித்து வரவேற்றது.

அவருக்கு எதிரே விளையாடிய சீன கிராண்ட் மாஸ்டரும் கடந்தாண்டின் உலகச் சதுரங்க வெற்றியாளருமான டிங் லிரன் தமது இறுதி ஒன்பது நிமிடங்களில் தவறான நகர்த்தல் ஒன்றினை செய்து தோல்வியை ஒப்புக்கொண்டார்.

டிங்கின் பிசகான நகர்த்தலை உடனே கண்டுகொண்ட குகேஷ் பரபரப்பாகவும் கண்ணீரோடும் காணப்பட்டார்; இருக்கையிலிருந்து எழுந்து நடமாடலானார்.
6.5-&6.5 என்றிருந்த சமப்புள்ளி நிலவரம் நேற்று குகேஷின் வெற்றியை உறுதிப்படுத்தும் வண்ணம் 7.5-6.5 என மாறி அவரை 18வது உலகச் சதுரங்க வெற்றியாளராக அரியணையேற்றியது.

ரஷ்ய சதுரங்க வீரர் கேரி காஸ்பராவ் 1985ஆம் ஆண்டு தமது 22 வயதில் உலக வெற்றியாளர் பட்டம் வென்றதே முன்னைய சாதனை. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு குகேஷ் அதனை தனது 18 வது வயதில் முறியடித்துள்ளார்.

உலகளவில் குறைந்த வயதில் செஸ் சாம்பியன் ஆன பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் கடைசியாக இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், 2012ல் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

அதற்கு பின் சதுரங்க உலக சாம்பியன் பட்டம் பெறும் முதல் இந்தியர் என்ற சாதனையையும் குகேஷ் படைத்துள்ளார்.

இன்று (டிசம்பர் 13) மாலை 6 மணி அளவில் ஈகுவாரியஸ் விடுதியில் நடக்கும் நிகழ்ச்சியில் அவருக்குப் பட்டம் வழங்கப்படும். லிரெனை வென்று புதிய உலக சாம்பியனாகி உள்ள குகேசுக்கு 21 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கும்.

“பத்தாண்டு காலமாக உலகச் சதுரங்க வெற்றியாளராவதையே முதன்மை இலக்காகக் கொண்டிருந்தேன்,” எனக் கூறிய குகேஷ் தம் கனவு ஈடேறியதில் பெருமையடைவதாக சொன்னார். ‘இந்த போட்டி டிராவில் முடியும் என்று நினைத்தேன்.

ஆனால், இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைக்க வேண்டும் என்று, 11 வயதில் நான் கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் தற்போது வெற்றி பெற்றுள்ளேன்’ என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

குகேஷ்க்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த சரித்திர வெற்றி மூலம் குகேஷ், சாதிக்க துடிக்கும் இந்திய இளைஞர் சமுதாயத்தினர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, ஊக்கத்தைத் தந்திருக்கிறார்.

வாழ்த்துகள் குகேஷ்!

படிக்க வேண்டும்

spot_img