2030ம் ஆண்டுக்குள் என்.எல்.சி. அனல் மின் உற்பத்தியை 3 மடங்காக உயர்த்துவது இலக்கு என்று நெய்வேலியில் நடந்த விழாவில் தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசினார்.
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் எரிசக்தி துறையில் 70 ஆண்டுக ளாக நாட்டுக்கு செய்து வரும் சேவையை நினைவு கூறும் வகையில் 69வது நிறுவன நாள் கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, என்.எல்.சிக்கு நிலங்களை கொடுத்த ஜம்புலிங்க முதலியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் அனைத்து அலகுகளிலும் அதன் தலைமை அதிகாரிகளால் என்.எல்.சி. இந்தியா நிறுவன கொடி ஏற்பட்டது. முன்னதாக நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் என்.எல்.சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்தார்.
இதைத்தொடர்ந்து 11வது வட்டத்தில் உள்ள லிக்னைட் அரங்கில் நடந்த விழாவுக்கு வந்தவர்களை மனிதவளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப் வரவேற்றார். இதில் முன்னாள் தலைவர் நிர்வாக இயக்குனர்கள் கலந்து கொண்டு பேசினர்.
தொடர்ந்து சிங்கக்குறியீட்டு உருவம் அறிமுகம் செய்யப்பட்டது.
இதில் என்.எல்.சி. தலைவர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி கலந்து கொண்டு பேசுகையில், “தற்போது உள்ள 44 மில்லியன் மெட் ரிக்டன்கள் பழுப்பு நிலக்கரி உற்பத்தியை 100 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் மேலாக உயர்த்துவது, அனல் மின் உற்பத்தியை 3 மடங்காகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தியை 7 மடங்காகவும் 2030-ஆம் ஆண்டுக்குள் உயர்த்துவது போன்ற தொலைநோக்கு இலக்குகளை என்.எல்.சி. நிர்ணயித்துள்ளது” என்றார்.
இந்த விழாவில், என்.எல்.சி. மின்துறை இயக்குனர் வெங்கடாஜலம் மற்றும் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள், தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பத்மஸ்ரீ பத்ம பூஷன் ஷோபனாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நெய்வேலி ஸ்நேகா வேலை வாய்ப்புப் பள்ளி மாணவ -மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.