பருத்தி சாகுபடியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் இளஞ்சிவப்பு காய்புழுவின் எதிர்ப்புத்திறனை முறியடிக்கும் புதிய படிக நச்சு மரபணுவை, கோயம்புத்தூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.டெல்லியில் நடைபெற்ற ஐசிஏஆர் 98-வது நிறுவன நாள் விழாவில், கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்துக்கும், சேலத்தைச் சேர்ந்த ராசி சீட்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையே, இந்த புதிய மரபணு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது.
நிறுவன இயக்குநர் டாக்டர் பி. கோவிந்தராஜ் கூறுகையில், “டாக்டர் பி.சிங்காரவேலு தலைமையிலான ஆராய்ச்சிக் குழு 15 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்ட ஆய்வில், Bacillus thuringiensis படிக நச்சு மரபணுக்களை வெற்றிகரமாக கண்டறிந்துள்ளது. அவற்றில் ஒரு புதிய மரபணு, தற்போது Bollgard II பருத்திக்கு எதிர்ப்புத்திறன் பெற்றுள்ள இளஞ்சிவப்பு காய்புழுவையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது” என்றார்.



