நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகங்களில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப் படும் அறிக்கைகள் இந்தியில் தான் இருக்க வேண்டும்.
அவற்றுக்கு தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் பதில்களும் இந்தியிலேயே தான் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள அலுவலகங்களிலும் இந்தி தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கூறுவது அப்பட்டமான மொழித்திணிப்பு ஆகும்.
இது எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கும், பிற மாநில மொழிகளுக்கும் இழைக்கப்படும் அநீதி ஆகும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது; அனுமதிக்கவும் கூடாது.
கடந்த சில ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள், வானொலிகள், பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள் ஆகியவை வழியாகவும், கல்வியில் தொடங்கி கலாச்சாரம் வரை அனைத்திலும் இந்தியைத் திணிக்க முயன்று வரும் மத்திய அரசு, இப்போது நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் வழியாக இந்தியைத் திணிக்கத் துடிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
இந்த இந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம் என்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் முடிந்ததையெல்லாம் திமுக செய்யும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்து இருக்கிறார்.
போராட்டத்தையும் திமுக முன்னெடுத்து இருக்கிறது. பிற அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள்.
அலுவல்மொழி பயன்பாடு என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் செயலை மத்திய அரசு ஆதரிக்கக் கூடாது.
இந்தியைத் திணிக்கும் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெறும்படி நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைமைக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்.
பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தியைத் திணிக்கும் போது அது வெறுப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்த வழிகளில் இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயன்றாலும் அதை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள்.
இந்தி திணிப்பை தமிழகம் ஒருபோதும் ஏற்காது; தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. தமிழ்நாட்டு வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் புரிந்து விடும்.
‘தமிழரை பிரதமராக்குவது இருக்கட்டும், தமிழை முதலில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அங்கீகரியுங்கள், பார்க்கலாம்!