திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் குரும்பபட்டி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட மீனாட்சி நாயக்கன்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் பெரும்பாலும் கூலி தொழில் செய்து வரும் பெற்றோர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர் குறிப்பாக மீனாட்சி நாயக்கன்பட்டி சோலைராஜா காலனி குரும்பபட்டி ஆகிய பகுதிகளில் இருந்து 50- க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இப்பள்ளி மீனாட்சி நாயக்கன்பட்டி ஊருக்குள் முன்பு செயல்பட்டு வந்தது. தற்போது பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு புதிய கட்டிடம் போக்குவரத்து வசதி இல்லாத திண்டுக்கல் புறவழிச் சாலைக்கு அப்பால் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளிக்கு போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் தனியார் மினி பஸ் மூலம் தினந்தோறும் ரூபாய் 40 வரை கட்டணம் செலுத்தி மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
மினி பஸ் இயங்காத நாட்களில் மாணவ மாணவிகள் புறவழிச் சாலையை கடந்து ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பாதுகாப்பற்ற சூழலில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
மாணவ மாணவிகளின் பாதுகாப்பையும் பள்ளிக் கல்வியையும் கருத்தில் கொண்டு மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வர காலை மற்றும் மாலை இரண்டு வேளைகளில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இலவசமாக பயணிக்க இலவச பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரி மாணவ மாணவிகள் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.



