fbpx
Homeதலையங்கம்நரேந்திர மோடி அரசும் பத்திரிகை சுதந்திரமும்!

நரேந்திர மோடி அரசும் பத்திரிகை சுதந்திரமும்!

பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்த காலகட்டத்தில், அங்கு கோத்ரா கலவரம் நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன் இங்கிலாந்தை சேர்ந்த பி.பி.சி நிறுவனம் ஆவணப்படத்தை வெளியிட்டது.

இந்த படத்தின் ஒளிபரப்புக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. இருந்தும் சில இடங்களில் தடையை மீறி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டி ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டுள்ளதாகவும், நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக பி.பி.சி திட்டமிட்டு ஆவணப்படத்தை தயாரித்து இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை செய்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டது.

எனவே பி.பி.சி – இந்தியாவுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனிடையே நேற்று டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி – இந்தியா அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
மோடி அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பா.ஜ.க. தலைமையிலான தற்போதைய ஒன்றிய அரசின்கீழ் நாட்டின் மதிப்புக்குரிய அமைப்புகள் ஒருதலைப்போக்காகக் செயல்படுவதோடு அவற்றின் சுதந்திரத்தன்மையையும் முற்றிலுமாக இழந்துவிட்டன.

மக்கள் அளித்த ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்திய ஜனநாயகத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் பாழடித்து வருவதற்குக் காரணமானவர்கள், நடப்பவை அனைத்தையும் மக்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும், எதிர்வரும் தேர்தல்களில் இதற்கான தக்க பாடத்தை அவர்கள் புகட்டுவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டுவிட்டர் தளத்தில், ‘மோடி ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

தொலைதூரத்தில் இருந்து வரும் விமர்சனக் குரல்களை நெரிப்பதற்காக வெட்கக்கேடான மற்றும் மன்னிக்கப்படாத பழிவாங்கலுடன் செயல்படுகிறது’ என கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது டுவிட்டர் தளத்தில், ‘முதலில் பி.பி.சி. ஆவணப்படங்களுக்கு தடை. அதானி நிறுவன முறைகேடுகளுக்கு விசாரணை இல்லை. தற்போது பி.பி.சி. நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை. இந்தியா: ஜனநாயகத்தின் தாய்தானா?’ என சாடியுள்ளார்.

“அரசாங்கக் கொள்கைகள் அல்லது ஆளும் அமைப்பை விமர்சிக்கும் ஊடகங்களை மிரட்டுவதற்கும் துன்புறுத்துவதற்கும் அரசுத் துறைகளை பயன்படுத்தும் போக்கின் தொடர்ச்சி இவை “ என்று எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை “சர்வே” செய்வதை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளது.

சமீப காலங்களில் தனக்கு எதிராகவும், ஆளும் அமைப்புக்கு எதிராகவும் உள்ள ஊடகங்களை விரோதமாக அரசாங்கம் கருதுகிறது. அதன் ஒரு பகுதியாக அத்தகைய ஊடகங்கள் மீது நடக்கும் தாக்குதலின் அங்கமாகவே இந்த ஆய்வு உள்ளது என்று இந்திய பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை என்ன? ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் என்ற லாப நோக்கமற்ற குழுவின் கூற்றுப்படி, மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பத்திரிகை சுதந்திரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

அந்த குழுவின் உலக பத்திரிகை சுதந்திர குறியீடு பட்டியலில் இடம்பிடித்துள்ள 180 நாடுகளில் இந்தியா 150வது இடத்தைப் பிடித்துள்ளது. இது 2014ஆம் ஆண்டில் இருந்து 10 இடங்கள் குறைந்த நிலையாகும்.

ஒன்றிய அரசை விமர்சித்தால் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை பாய்ந்து சென்று சோதனை நடத்தும் என்பதற்கு பல முன்னுதாரணங்கள் உண்டு. இன்னொரு உதாரணம் தான் பிபிசி மீதான ரெய்டு.

இதன் மூலம் ஒன்றிய அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைப்புகளை குறி வைப்பது இந்தியாவில் அசாதாரணமான விஷயம் அல்ல என்று உலக அரங்கில் விவாதிக்கப்படும் விஷயமாக மாறி இருக்கிறது.

இந்த நிலையை மாற்றியாக வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img