கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட லிங்காபுரம் என்னும் கிராமத்தில் பவானியாற்றில் இணையும் காட்டாறான காந்தையாறு ஓடுகிறது.
ஆற்றின் வடக்கு பகுதி மறுகரையில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் காந்தவயல், காந்தையூர், மொக்கைமேடு, உளியூர் என நான்கு மலையடிவார கிராமங்கள் உள்ளன.
நானூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமங்களை சேர்ந்த மக்கள் கல்வி, வேலை, மருத்துவம், விவசாய பொருட்கள் விற்பனை என அனைத்து தேவைகளுக்கும் காந்தையாற்றை கடந்து லிங் காபுரத்தை அடைந்த பின்னரே நகர பகுதிக்கு செல்ல இயலும்.
காட்டாற்றை கடப்பதில் உள்ள ஆபத்து காரணமாக இவர்களின் போக்குவரத்து வசதிக்காக கடந்த 2008 ஆம் ஆண்டு பழங்குடியின மக்களின் நலத்திட்டத்தின் கீழ் ரூபாய் நான்கு கோடி செலவில் காந்தை யாற்றின் குறுக்கே ஆற்றின் தரை மட்டத்தில் இருந்து இணைப்பு சாலையோடு இருபதடி உயரத்தில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.
ஆனால், பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள இவ்விடத்தில் அணையின் நீர்தேக்க உயரத்தை சரியாக கணக்கிடாமல் இப்பாலம் கட்டப்பட்டதால் சிக்கல் உருவாகியது. மழைக்காலங்களில் காட்டாறுகளில் நீர்வரத்து அதிகரித்து அருகில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்ட உயரம் 97 அடியை கடகின்றதோ அப்போதெல்லாம் இந்த காதையாற்று பாலம் நீருக்கடியில் மூழ்கி விடும்.
அணையின் நீர்வரத்தை பொருத்து மெல்ல மெல்ல மூழ்க துவங்கும் இப்பாலம் பின்னர் யார் கண்களுக்கும் தென்படாமல் ஒட்டுமொத்தமாக நீருக்கடியில் சென்று விடும். இதன் இணைப்பு சாலையும் முழ்கிவிடும்.
ஆண்டுக்கு சுமார் ஆறு மாதங்கள் வரை தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கும் இப்பாலத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இம்மலை கிராம மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், முதியோர், பெண்கள், அவசர மருத்துவ தேவையுள்ள கர்ப்பிணிகள், நோயாளிகள் என அனைவரும் உயிருக்கு உத்தரவாதமில்லாத முறையில் பரிசல்கள் மூலமே காட்டாற்றை கடந்து சென்று திரும்பும் சூழல் உருவாகும்.
இதனை கருத்தில் கொண்டு கடந்தாண்டு ரூபாய் 14 கோடி செலவில் புதிய உயர் மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது. பால பணிகள் இதுவரை பாதி யளவு கூட நிறைவு பெறாத நிலையில் தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96 அடியை கடந்து விட்டதால் பழைய பாலம் நீருக்கடியில் மீண்டும் மூழ்கி விட்டது.
இந்நிலையில், மக்களின் ஆபத்தான பரிசல் பயணத்தை தவிர்க்கும் வகையில் தற்போது சிறுமுகை பேரூராட்சியின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் பொது மக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் மோட்டார் படகு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் மாணவ மாணவிகள் மற்றும் வயது முதிர்ந்தோர் இலவச மாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று 16 ம் தேதி மாலை முதல் இயக்கப்பட்ட நிலையில் இதனை மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் வாசுதேவன்,சிறுமுகை போரூராட்சி தலைவர் மாலதி உதய குமார், நேரில் ஆய்வு செய்தார்.
மோட்டார் படகு போக்குவரத்து துவக்கம் இப்பகுதி மக்களின் போக்குவரத்தை சற்றே எளிதாகியுள்ளது என்றாலும் புதிய பாலம் கட்டும் பணி யை விரைவு படுத்துவதே இப்பிரச்ச னைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்பதே இப்பகுதி கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.