fbpx
Homeதலையங்கம்அமைச்சர் டி.ஆர்.பி,ராஜா-வாழ்த்தும் எதிர்பார்ப்பும்!

அமைச்சர் டி.ஆர்.பி,ராஜா-வாழ்த்தும் எதிர்பார்ப்பும்!

தமிழ்நாடு அமைச்சரவையில் டெல்டா மாவட்டங்களிலிருந்து அமைச்சர்கள் யாரும் இல்லை என்ற குறை இருந்து வந்தது. தற்போது டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டதையடுத்து, அந்த குறை நீங்கியிருக்கிறது.

இதுமட்டுமின்றி, டெல்டா மாவட்டங்களில் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்தால், திமுகவின் செல்வாக்கு குறைந்து வருவதற்கு மாற்றாக உறுதியான ஒரு தலைவரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் டி.ஆர்.பி. ராஜாவை தேர்தலில் அறிமுகப்படுத்தினார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

தற்போது, முதல்முறையாக அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை வழங்கப்பட்டது மிகமுக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

தமிழ்நாடு அரசை பொறுத்தவரை, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் ‘1 ட்ரில்லியன் டாலர்’ பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என இலக்கை நிர்ணயித்துள்ளது.

இதற்காக தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலக நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை ஈர்க்கும் பணியை மேற்கொண்டு வருகிறது தமிழ்நாடு அரசு.
விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டு முதலீட்டாளர்களை சந்திக்க இருக்கிறார்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தனிக் கொள்கையை வகுத்ததோடு மட்டுமல்லாமல், பல மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

இப்படி தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழில்துறை, தகவல், தொழில்நுட்பத்துறை, சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் பங்கு அவசியம் என முதலமைச்சர் கருதுகிறார்.

மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் இருந்து 2011, 2016, 2021 ஆகிய சட்டப் பேரவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் தான் டி.ஆர்.பி.ராஜா.

திராவிட மாடல் ஆட்சியின் எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்துடன் தமிழகத்தை தொடர்ந்து நம்பர் ஒன் மாநிலமாக அமைத்திட எல்லா விதத்திலும் என் பணியை திறம்பட செய்வேன் என்று அமைச்சராக பொறுப்பேற்றபின் டி.ஆர்.பி.ராஜா நாட்டு மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தனது மகன் டிஆர்பி.ராஜா சிறப்பாக பணியாற்றி தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும் என்று அவரது தந்தையும் எம்பியுமான டி.ஆர்.பாலு தனது வாழ்த்தைப் பதிவிட்டு இருக்கிறார்.

முதல் முறையாக அமைச்சராக பொறுபேற்று இருக்கும் டி.ஆர்.பி.ராஜாவுக்கு நாமும் வாழ்த்துகளை தெரிவிப்போம். தொழில்துறை வளர்ச்சிக்கு எந்தளவு அவர் பங்களிப்பார் என்பதை தமிழ்நாடே எதிர்பார்க்கிறது.

பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img