வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லவன்பாளையம் சமுத்திரம் ஏரி நீர்வரத்து கால்வாய் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம் பிரதீபன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் த.முரளி, மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மாநகர திமுக செயலாளர் கார்த்தி வேல் மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் நீர்வரத்து கால்வாய்கள் சீரமைப்பு, மின் பராமரிப்பு, ஏரி தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக அமைச்சர் எ.வ.வேலு நல்லவன்பாளையம் சமுத்திரம் ஏரியில் இருந்து துரிஞ்சல் ஆற்றுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “கடந்த ஆண்டு சமுத்திரம் ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீர் இராதாபாய் நகர், சொர்ணபூமி நகர், கீழ்அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நீர்புகுந்து மக்கள் சிரமப்பட்டனர்.
இதற்கு முக்கிய காரணம் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருந்ததுதான். இதனை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் துரிஞ்சல் ஆற்றுக்கு செல்லும் 5 கிலோ மீட்டர் நீள கால்வாயை தூர்வாரி அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 3 கிலோ மீட்டர் பணி முடிந்துள்ளது. மீதியுள்ள பணி விரைவில் நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார்.
மழைநீர் சேமிப்பையும், நகர்ப்புற நீர்ப்பாய்ச்சலையும் மேம்படுத்தும் நோக்கில் மேற் கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பொதுமக்கள் பாதுகாப்புக்கு பெரும் துணை புரியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



