fbpx
Homeதலையங்கம்மருத்துவ மாணவர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு!

மருத்துவ மாணவர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு!

தமிழ்நாட்டிலுள்ள சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதன் மருத்துவக்கல்லூரி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரி மற்றும் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆகிய நான்கு அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை நடப்பாண்டு முதல் ரத்து செய்வதாக அறிவித்து அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது, இந்திய ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம்.

நீட் தேர்வின் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவு ஒன்றிய அரசால் சிதைக்கப்பட்டது. அடுத்தபடியாக மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வினையும் மருத்துவச்சேவை தலைமை இயக்குநரகமே நடத்தும் என்று அறிவித்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டிற்கும் வேட்டு வைக்க முனைந்தது.

தற்போது மேலும் ஒரு பேரிடியாக 1650 மருத்துவ இடங்கள் உள்ள நான்கு அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்று மருத்துவக் கல்வி வாரியம் மூலம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டு மருத்துவக்கல்லூரி இடங்களைப் பறிக்கும் இத்தகையே தொடர் நடவடிக்கைகள் அனைத்தும் தமிழ்நாட்டு மாணவர்கள் எக்காரணம் கொண்டும் மருத்துவம் பயின்று விடக்கூடாது என்ற உள்நோக்கமுடையச் செயல்பாடே தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

மருத்துவக் கல்வி வாரியத்திற்கு உண்மையிலேயே தமிழ்நாட்டு மருத்துவக்கல்லூரிகளில் இருக்கும் உள்கட்டமைப்பு குறைகளைக் களைவதுதான் நோக்கமாக இருக்குமாயின், கடந்த கல்வி ஆண்டிலேயே தொடர்புடைய கல்லூரி நிர்வாகங்களிடம் எச்சரித்து, எளிதாக அவற்றை சரி செய்திருக்க முடியும்.

அதனைவிடுத்து, கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்று அறிவித்திருப்பது, தமிழ்நாடு மற்றும் புதுவையிலுள்ள 1650 மருத்துவக் கல்வி இடங்களை முடக்கும் நோக்கமாகத் தான் இருக்கவேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கணிப்பாக உள்ளது.

திடீரென்று அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டால் அங்கு பயின்று வரும் மாணவர்களின் நிலை என்ன? ஏற்கனவே பயின்று பட்டம்பெற்ற மருத்துவர்களின் நிலை என்ன? மருத்துவக் கல்லூரியில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள், கற்பிக்கும் ஆசிரியர்கள் நிலை என்ன?

மாணவர்களின் மருத்துவ கனவைச் சிதைக்கும் வகையிலான இந்த அடாவடி அறிவிப்பை தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக மாணவர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள நான்கு அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவினை ஒன்றிய அரசின் மருத்துவக் கல்வி வாரியம் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img