சில நாட்களுக்கு முன்புவரை, இந்தியாவுக்கு 50 சதவீத வரி போட்டது, போட்டது தான்.. இனி அதனை நீக்க முடியாது என்ற தொனியில் மிக ஆவேசமாக பேசி வந்த டிரம்ப், தற்போது திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். “வர்த்தக தடைகளை நீக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. விரைவில் எனது நண்பர் மோடியுடன் பேசுவேன்” எனக் கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாளிகள். இந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் எல்லையற்ற வாய்ப்புகளை உருவாக்கும்“ எனக் கூறியிருந்தார்.
இவ்வளவு நாள் இந்தியாவுக்கு எதிராக காட்டமாக பேசிய ட்ரம்ப் திடீரென மனம் மாறியது பலரது கவனத்தையும் ஈர்த்தது. டிரம்ப்பின் திடீர் பல்டிக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று ரஷ்யா. அதாவது, உக்ரைன் போருக்குப் பின்னர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு கடுமையான பொருளாதாரத் தடைகள் விதித்தன.
ஆனால் இந்தியா, ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இது ரஷ்யாவை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகிறது. இந்தியா, மறைமுகமாக ரஷ்யா போரை நீட்டிக்க உதவுகிறது என்ற குற்றச்சாட்டு அமெரிக்காவிடம் இருந்து எழுந்துள்ளது. ஆனாலும் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை மாற்ற முடியாமல் போனதால், டிரம்ப் மெல்லிய குரலில் இந்தியாவுடன் பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது முக்கியக் காரணம் சீனா. இந்தியாவுடன் அடிக்கடி எல்லைப் பிரச்சனை இருந்தாலும், சமீபத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி இடையே அதிக நெருக்கம் ஏற்பட்டது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீனா இந்தியாவுக்கு அளித்த வரவேற்பும், மோடியின் புகழ் சீன சமூக வலைதளங்களில் அதிகரித்ததும், அமெரிக்காவுக்கு சற்றே பதற்றத்தை ஏற்படுத்தியது. உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான சீனா&-இந்தியா இணைந்து செல்லும் சாத்தியம் டிரம்பை கவலைப்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
மூன்றாவது முக்கியக் காரணம் – இந்தியாவில் சமீபத்தில் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம். உள்நாட்டு நுகர்வு அதிகரிக்க, பொருளாதாரம் சுறுசுறுப்பாக இயங்க உதவும் இந்த மாற்றம், அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்பால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இதுவும் டிரம்பின் கணக்குகளை குழப்பியது. தான் ஒன்று நினைத்தால் வேறு ஒன்று நடக்கிறதே என்பதால் டிரம்ப் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
அமெரிக்கா விதித்த வரி விதிப்பால் இந்தியா வேறு வழியின்றி அடிபணியும் என எதிர்பார்த்த நிலையில், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா நட்புறவை வலுப்படுத்தியதோடு, அமெரிக்காவுக்கு மாற்றாக புதிய சந்தைகளை தேடியது அமெரிக்காவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இதேபோல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா, – ரஷ்யா, – சீனா வலுவான கூட்டாளிகளாக வருகிறது. இதன் வலிமை ஜி-7-க்கு சவால் விடக்கூடிய அளவில் உருவாவதால் இதுவும் டிரம்ப்புக்கு சற்றே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
இதனால் தான் இந்தியாவுடனான உறவை புதுப்பித்துக் கொள்ள டிரம்ப் இறங்கி வந்ததாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். அதே நேரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக பேசுவதன் மூலம் டிரம்ப் பணிந்து விட்டார் என்று கருதிவிட முடியாது, ராஜதந்திரமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளனர் அரசியல் விமர்சகர்கள்.
மொத்தத்தில் நம்மூர் கிராமத்துத் திண்ணையில் நடக்கும் ஆடு புலி ஆட்டம், சர்வதேச அரங்கில் தொடங்கி இருக்கிறது. ஒருபுறம் அமெரிக்கா, மறுபுறம் இந்தியா- ரஷ்யா- சீனா ஆட்டம் ஜோராகத்தான் இருக்கும்.
இந்தியாவிற்கு நல்லது நடந்தால் சரி!



