கடந்த 2019 மக்களவை தேர்தலில், 82 விழுக்காடு வாக்குப் பதிவு செய்து, மற்ற மாநில மக்களுக்கு, ஜனநாயக கடமையாற்றுவதில் முன்னோடியாக விளங்கிய மாநிலம் மணிப்பூர்.
ஆனால், அதற்கான சுவடு கூட தெரியாத அளவில், இன வன்கொடுமைக்கு ஆட்பட்டு, வாக்களிப்பது எதற்கு என்று கேட்கிற அளவிற்கு சென்றுள்ளனர் மணிப்பூர் மாநில சிறுபான்மையினர்.
இதுபோன்ற நிலை உருவாக, சிறுபான்மையின மக்களின் எஸ்டி இட ஒதுக்கீட்டை ஒடுக்குவதற்காக, பெரும்பான்மை சமூகமாக விளங்கும் மொய்தி இனத்தின் ஆதரவுடன் அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க ஆட்சியில் முடுக்கிவிடப்பட்ட இனக்கலவரமே காரணம் என்பது எதிர்க்கட்சிகளின் கடுமையான குற்றச்சாட்டு.
கலவரத்தில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணிப்பூர் மக்கள், தங்களின் உடைமைகளையும், இருப்பிடங்களையும் இழந்து, நிவாரண முகாம்களில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உணவின்றி, உடுத்த மாற்று துணியின்றி, சரியான மின்சார வசதி, கழிப்பறை வசதி என எவையும் இல்லாமல் கடும் நெருக்கடிக்கு ஆட்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மணிப்பூரில் ஏப்ரல், 19, 26ம் தேதிகளில் இருகட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, தங்களது பதவியை தக்கவைக்க வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சியினரும் பாஜகவுக்கு எதிராக மும்முரமாக களமிறங்கி இருக்கிறார்கள். ஆனால் அங்கே தேர்தல் திருவிழா களையிழந்தே காணப்படுகிறது.
இது குறித்து, நிவாரண முகாம்களில் வாழும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களில் ஒருவரான நோபி என்ற பெண், “தற்போது ஆட்சி செய்து வரும் பா.ஜ.க, எங்களின் வாழ்வியலுக்கான உரிமையையே பிடுங்கியுள்ளது.
வாக்குரிமையை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்ய போகிறோம். எங்களின் வாழ்க்கையை சூறையாடியவர்களுக்கு, நாங்கள் ஏன் எங்களுடைய வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்” என கேள்விகளுடன் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
இது போன்ற கருத்துகள், மணிப்பூர் மாநிலம் முழுவதும் பல இடங்களிலும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது.
மணிப்பூரில் இனப்பிரச்னை நீறுபூத்த நெருப்பாகத் தான் இருக்கிறது. அவ்வப்போது மோதலும் வெடிக்கிறது. வருவது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் மக்கள் அளிக்கும் தீர்ப்பு அங்கே தீர்வுக்கு வழிகோலும் என்ற நம்பிக்கையுடன் வாக்களிக்கக் காத்திருக்கிறார்கள் அம்மாநில மக்கள்.
மணிப்பூர் மக்களின் துயரம் தீருமா?