மகாத்மாகாந்தி 100 நாள் வேலைத் திட்டம் என்பது, கிராமப்புறங்களில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 100 நாள்கள் கூலி வேலைக்கான உத்தரவாதத்தை வழங்குகிறது.
மேலும், இந்தத் திட்டம் என்பது தேவைக்கேற்ற திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்தத் திட்டம் அளிக்கிறது.
100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியின வகுப்பினர், அனைத்துப் பிரிவுகளையும் சார்ந்த பெண்களே அதிகளவு பயனடைந்து வருகின்றனர். எடுத்துக் காட்டாக, தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளில், கிட்டத்தட்ட 85-90% பேர் பெண்களாக உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், 100 நாள் வேலை திட்டத்துக்கு 21.6% குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2021 – 2022 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அந்தத் திட்டத்திற்கு 98,467.85 கோடி ஒதுக்கப்பட்டது, 2022-2023 ஆம் ஆண்டு ரூ.73 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டது.
சமீபத்திய நிதிநிலை அறிக்கையில், அதற்கான நிதியை ரூ.60 ஆயிரம் கோடியாகக் குறைத்திருக்கிறார்கள். இதில் இன்னும் கொடுமை என்ன வென்றால், மாநில அரசும் குறிப்பிட்ட அளவு நிதி அளிக்கவேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியிருப்பதுதான்.
ஒன்றிய பாஜக அரசின் இந்த போக்கை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், இந்த நல்ல திட்டத்தின் மீது ஒன்றிய அரசு கோடரியை பயன்படுத்துகிறது’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இதேபோல பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.
கிராமப்புற ஏழை மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு அழித்துக் கொண்டிருக்கிறது. இது கிராமப்புற ஏழைகளின் வயிற்றில் அடிப்பதாகும்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்காததால் ஏழைகள் வஞ்சிக்கப்படுவதாக தற்போது பரவலாக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல் எழுந்து வருகிறது.
கொடுங்கோல் ஆட்சியால் துன்புற்று வடிக்கும் மக்களின் கண்ணீர், ஆட்சியாளனின் செல்வத்தை அழிக்கும் படையாகும் என்கிறார், திருவள்ளுவர். தமிழ் தெரியாத பாஜக மேலிடத்தலைவர்கள் அவ்வப்போது திருக்குறளைச் சுட்டிக்காட்டி பேசுவார்கள்.
ஆனால் அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை
என்ற குறளை மறந்து ஏழைகளை கண்ணீர் வடிக்கச் செய்கிறார்களே, இது நியாயமா?
100 நாள் திட்டத்தை நீர்த்துப்போகச்செய்யும் நடவடிக்கை கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் கொடுமையாகும். எனவே, இந்த நிதியாண்டில் இந்தத் திட்டத்தை முறையாக செயல்படுத்த, ஊதியம் மற்றும் பொருள்கள் வழங்குவதற்கான நிதியை அதிகப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
ஒன்றிய பாஜக அரசு சிந்திக்க வேண்டும்!