கோவை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டி உள்ளது.
இதற்காக தற்போது உள்ள விமான நிலையத்தில் அருகில் உள்ள தனியார் நிலங்களை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தி வருகிறது.
முன்னதாக நிலம் கொடுப்போர்க்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது இழப்பீடு தொகை மட்டுமே வழங்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, நிலம் கொடுத்த ஒரு சில மாதங்களுக்குள், வீடுகளை காலி செய்யக்கூறி அதிகாரிகள் மிரட்டுவதாக விமான நிலைய சுற்று வட்டார பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்டியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனு
இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாட்டின் வளர்ச்சிக்காக தங்களது நிலங்களை கொடுத்துள்ளதாகவும், தற்போது குடியிருக்கும் வீடுகளை உடனடியாக அதிகாரிகள் காலி செய்யக் கோரி மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டினர்.
தங்களது குழந்தைகள் பள்ளி கல்லூரிகளில் படித்து வரும் நிலையில் திடீரென மிரட்டி, மின் இணைப்பு குடிநீர் இணைப்பை துண்டித்து வருவதாகவும், இதனை தடுக்க வேண்டும் என்றும் கூறினர்.
மேலும், வீடுகளை காலி செய்ய குறைந்தது ஆறு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.