நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சி.டி.சி.) தரவுகளின்படி, புகையிலை பழக்கத்தால் ஆண்டுதோறும் இந்தியாவில் 13 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்தியாவில் புகையிலையின் சுமை மிகப்பெரியது. 10 இந்தியர்களில் ஒருவர் புகையிலை தொடர்பான நோய்களால் முன்கூட்டியே இறக்கிறார் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் புகைபிடிப்பதை கைவிடுபவர்களின் விகிதம் குறைவாகவே உள்ளது.
சுமார் 7 சதவீதம் பேர் மட்டுமே எந்த உதவியுமின்றி வெற்றிகரமாக புகைபிடிப்பதை விட்டுவிடுகிறார்கள். புகையிலை தொடர்பான நோய்களுக்கு இந்தியா ஆண்டுதோறும் ரூ.1.77 லட்சம் கோடிக்கு மேல் செலவிடுகிறது.
உலகளவில், சிகரெட்டுகளுக்கு விவேகமான மாற்றாக நிகோட்டின் பைகள் பிரபலமடைந்து வருகின்றன.
இந்த தயாரிப்புகள் இப்போது சுவீடன், நார்வே, அமெரிக்கா மற்றும் டென்மார்க் உள்பட 34 நாடுகளில் கிடைக்கின்றன. புகையற்ற நிகோட்டின் மாற்றுகள், புகையிலையில் உள்ள தார் மற்றும் எரிப்பை தடை செய்வதால், புகைபிடிப்பதைவிட 95 சதவீதம் வரை தீமை குறைந்து உள்ளதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது புகைபிடிப்பவர்கள் சிகரெட்டுகளை விட்டு விலகுவதை அதிகரிக்கும் என்று இந்திய மருத்துவர்களும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். புகையில்லை, எரிவதில்லை.- இவைதான் முக்கிய வேறுபாடுகள். அறிவியல் சொல்வதால், பாதுகாப்பான நிக்கோட்டின் குறித்து நாம் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
நிக்கோட்டின் பைகளால் அறவே ஆபத்து இல்லையெனச் சொல்ல முடியாது என்றாலும் இவ்வாண்டிற்குள் புகையிலைப் பயன்பாட்டை 30 விழுக்காடுவரை குறைக்க வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை எட்டுவதில் அது அர்த்தமுள்ள பங்களிப்பை அளிக்கும் என்பது ஒன்றிய சுகாதாரத் துறையின் கணிப்பாகும்.
புகைப்பழக்கத்திற்கு எதிராகப் பரவலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விலை மதிப்பற்றது மனித உயிர். அந்த உயிர்களைக் கொல்லும் புகையை அடியோடு அணைக்க வேண்டும். ஆனாலும் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்டெடுப்பது என்பது பெரும் சவாலாக இருக்கும்.
ஆனாலும், புகைப்பிடிப்பதை கணிசமாக குறைக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது. புகைப்பிடிக்கும் ஒவ்வொருவரும் தன் உயிரை மதிக்க வேண்டும். “திருடனாப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
திருட்டை ஒழிக்க முடியாவிட்டாலும் காவல் துறை கைகட்டி சும்மாவா இருக்கிறது? அதே போலத்தான் புகைப்பிடித்தலை அடியோடு ஒழிக்க முடியாவிட்டாலும் அதனை குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் ஒன்றிய, மாநில அரசுகளால் விழிப்புணர்வோடு முன்னெடுக்கப்படுகிறது.
இளைஞர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாவதை முதலில் தடுக்க வேண்டும். புகைப்பிடித்தால் புற்று நோய் வரும் என்பதை அழுத்தமாக அவர்கள் மனதில் சிறார் பருவத்தில் இருந்தே உணர்த்த வேண்டும். அதற்குப் பெற்றோரின் பங்களிப்பும் மிகமிக அவசியம்.
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. புகைப்பிடிப்பதை முற்றிலும் தவிர்த்திட அரசோடு சேர்ந்து நாமும் உறுதி எடுப்போம்!



