கொங்கு நாட்டுப் பகுதி உபசரிப்புக்கு பெயர் போனது. கொங்கு நாட்டு மக்கள் வந்தவர்களை உபசரிப்பது பற்றி கண்ணதாசன் கூட பாடி இருக்கிறார். ‘வாங்க, உட்காருங்க, சாப்பிடுங்க!’ என்று உபசரிப்பதில் வல்லவர்கள் அவர்கள்.
கொங்கு நாடு மட்டும் அல்ல. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான உணவு வகை உண்டு.
மதுரை ஜிகிர்தண்டா, கோயம்புத்தூர் ஏரியா பருப்பு சோறு, திருநெல்வேலி சொதி, திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி என்று ஊருக்கு ஒவ்வொரு வகை உணவு.
எல்லா ஊர்களிலுமே எல்லா ஊர் மக்களுக்குமே உணவின் மீது ஒரு பிரியம் இருக்கிறது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் சமயம்தான் வீடுகளில் பலகாரம் செய்வார்கள். அவ்வளவு ஏன்? தீபாவளி, பொங்கல் சமயங்களில் தான் வீட்டில் இட்லியே சுடுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆனால், இப்போதெல்லாம் எல்லா நாட்களிலும் எல்லாப் பலகாரங்களும் கிடைக்கின்றன. பன்னீர் வகை பலகாரங்கள், இறைச்சி வகைகள், வெஜிடேரியன் வகைகள் என்று பல வகையான உணவு வகைகள் மட்டும் இல்லாமல் வடநாட்டு உணவு வகைகள், மேலை நாட்டு உணவு வகைகள், பீட்சா, பர்கர், சமோசா என்று கொட்டிக் கிடக்கின்றன. பட்டியல் தான் போட முடியவில்லை.
இப்போது, நாம் யோசிக்க வேண்டியது என்னவென்றால், உணவு வகைகள் பெருகுவது நல்லதா? என்பதுதான்.
உணவு வகைகள் பெருகப் பெருக உடல் ஆரோக்கியம் குறைந்து கொண்டே போகிறதோ என்ற ஒரு கேள்வி எழுகிறது. வாழ்க்கை முறையும் இப்போது மாறி வருகிறது.
வெறும் விவசாயம் மட்டுமே முக்கியத் தொழிலாக இருந்தபோது அதிகாலையில் எழுந்து பழையது எனப் படும் பழைய சோற்றுடன் பச்சை வெங்காயம் சாப்பிட்டு விட்டு கலப்பையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு விவசாயத்திற்குக் கிளம்புவார்கள்.
பகலில் ஏதாவது ஒரு உணவு வீட்டில் இருந்து வரும். பெரும்பாலும் களி, கஞ்சி போன்றவை தான் இருக்கும்.
இரவு வீட்டிற்கு வந்தால் சூடான சோறு, அதுவும் நிறைய வகைகள் இருக்காது. ஒரு சோறு, குழம்பு இல்லையென்றால் ஒரு சோறு வெஞ்சனம் இவ்வளவுதான். இப்படித்தான் கிராமப்புற வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.
வளர்ச்சி ஏற்பட ஏற்பட நகரங்கள் பெருக ஆரம்பித்தன. மக்களிடம் பணம் புரள ஆரம்பித்த உடன் ஹோட்டல்களுக்கு அடிக்கடி போவது, வாங்கிச் சாப்பிடுவது போன்ற வழக்கங்கள் பெருகிவிட்டன.
‘ஜங்க் புட்!’ என்ற உணவு வகைகளை மக்கள் வாங்குவதும் அதிகமாகி விட்டது.
இப்போது எதற்காக இந்தக் கதை எல்லாம் பேசுகிறீர்கள் என்கிறீர்களா? எந்த மாதிரி உணவு சாப்பிடுவது என்பது குறித்து ஒரு விழிப்புணர்வு நமக்கு தேவை என்பதைத்தான் நாம் இப்போது பேசப் போகிறோம்.
வாழ்க்கையில் வசதிகள் பெருகப் பெருக கிடைக்கும் உணவு வகைகளும் அதிகம் தான். அதற்காக கிடைக்கிறதே என்பதற்காக கண்டதையும் சாப்பிடுவது நல்லதா, என்றால் நிச்சயமாக இல்லை.
நமது வாழ்க்கை முறைக்கேற்ற உணவு எது என்று தேர்ந்தெடுத்து உணவு சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.
பொதுவாக உணவு உண்ணும்போது வயிற்றில் பாதி பங்கு உணவு, கால் பங்கு தண்ணீர் , கால் பங்கு காலியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். இன்றைய வாழ்க்கை முறையில் உடல் உழைப்பு குறைவாக இருக்கிறது.
கம்ப்யூட்டர் துறை, நிர்வாகத் துறை என்று நல்ல வேலைகளில் இருப்பவர்கள் எல்லாருக்கும் நல்ல ஊதியமும் கிடைக்கிறது என்பது உண்மைதான். அது மட்டும் அல்ல. இன்று பெரும்பாலான இளைஞர்கள் நல்லவிதமாக சம்பாதிக்கிறார்கள். அதற்கேற்ற முறையில் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.
அதுமட்டும் அல்ல குழந்தைகளையும் நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கருதுகிறார்கள். அதற்காக, அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள்.
குழந்தைகளைப் பற்றி இன்றைய ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால்,அவர்கள¢ அதிகமாக விளையாடச் செல்வதில்லை. அதனால், ஒபிசிட்டி என்னும் பிரச்சினை ஏற்படுகிறது என்பதுதான்.
அதாவது, குழந்தைகளின் உடலில் கொழுப்பு சத்து அதிகமாகி குண்டாகி விடுகிறார்கள். இது இப்போது மிகவும் அதிகரித்து வரும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது.
இது எதனால் ஏற்படுகிறது என்றால், தவறான உணவுப் பழக்கத்தினால் தான். குழந்தைகள் மட்டும் அல்ல, பெரியவர்களும் இன்று சரியான உணவுப் பழக்க வழக்கங்களை கடைபிடிக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான்.
முக்கியமாக நம் தமிழகத்தில் நாம் சாப்பிடும் பாலிஷ் செய்யப்பட்ட அரிசியால் செய்யப்படும் சோறு தான் சர்க்கரை நோய்க்கு அதிகமான காரணமாக அமைகிறது என்கிறார்கள்.
அரிசிச் சோறு மட்டும் அல்லாமல் தேங்காயை அரைத்து ஊற்றி செய்யப்படும் குழம்பு வகைகள் எல்லாமே கொழுப்பு சத்தை அதிகரிக்கச் செய்வதாகவும், சர்க்கரையை அதிகரிக்கச் செய்வதாகவும் கூறுகிறார்கள்.
எண்ணெயில் பொரித்த உணவுகள் இன்னொரு வகையான விஷ உணவாகும். இப்படி நாம் உணவு உண்ணும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் மிகவும் அதிகம். என்னென்ன உணவு வகைகள், எங்கே எப்படிச் சாப்பிட வேண்டும் என்பது குறித்து அறிவுரை கூற சத்துணவு ஆலோசகர்கள் இன்று நிறையப் பேர் இருக்கிறார்கள்.
நாம் எந்த அளவுக்கு வேலை செய்கிறோம் என்பதற்கேற்ப நமக்கு எப்படிப் பட்ட சரிவிகித உணவு தேவை என்பதை சத்துணவு நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இப்போதைய இளைஞர்களில் ஒருசாரார் என்ன சொல்கிறார்கள் என்றால் எதை வேண்டுமானாலும் சாப்பிட்டு விட்டு அதற்கேற்ற வகையில் ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்து சரி பண்ணி விடலாம் என்கிறார்கள். அது எவ்வளவு தூரம் உண்மை என்பது புரியவில்லை.
பொதுவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நாம் உண்ணும் உணவு குறித்து நன்றாக சிந்தித்து உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சிந்தனை இல்லாமல் ருசிக்காக மட்டுமே உண்பது மிகவும் ஆபத்தானது என்பது தான்.
உணவு குறித்துப் பேசும்போது பின்வரும் விஷயங்கள் குறித்து ஆராய வேண்டும்.
1) செய்யும் தொழில்,
2) உழைப்பின் அளவு,
3) உண்ணும் உணவின் வகை,
4) உண்ணும் நேரம்,
5) உண்பவர் வயது…
இப்படிப் பல விஷயங்களைப் பொறுத்து ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.
இப்போதெல்லாம், வீட்டை கவனித்துக் கொள்ளும் பெண்கள் கூட அதாவது, இல்லத்தரசிகள் கூட பழைய காலத்தைப் போல வேலை செய்வது இல்லை.
முன்பெல்லாம் ஆட்டி, அரைத்து, துவைத்து என்று பல வேலைகளை பெண்கள் செய்வது உண்டு. ஆனால், இப்போது எல்லாவற்றிற்கும் இயந்திரங்கள் வந்து விட்டன. அதனால், அந்தப் பக்கத்திலும் உடல் உழைப்பு குறைந்து விட்டது. ஆனால், அதே சமயம் வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பொறுப்பும், ஸ்ட்ரெஸ்சும் அதிகமாக இருக்கும்.
இரண்டு விதமான பொறுப்புகளையும் பெண்கள் சுமக்கிறார்கள். அதனால், சில வேளைகளில் ஆர்டர் செய்து சாப்பிடுவது, ஓட்டலில் வாங்கி சாப்பிடுவது என்பதெல்லாம் சகஜமாகி விடுகிறது.
பெரும்பாலும் வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆர்டர் சாப்பாட்டிலேயே காலத்தை ஓட்டி விடுகிறார்கள் என்றால் வேலைக்குச் செல்லும் தாயாரால் சமைக்க முடியவில்லை, சமைக்க நேரம் இல்லை என்பதால் குழந்தைகளுக்கும் பல நேரங்களில் ஆர்டர் சாப்பாடு தான்.
எப்படியாவது நேரம் ஏற்படுத்திக் கொண்டு வீட்டில் ஒரு வேளையாவது சமைப்பதற்கு பெண்கள் முன்வரவேண்டும். காய்கறிகள், கீரை, புலால் உணவு என்று அவரவர்கள் வழக்கத்திற்கேற்ப சமைத்து உண்பதே சிறந்தது.
விடுமுறை நாட்கள¤ல் திட்டமிட்டுக் கொண்டால் ஒரு வாரத்திற்குத் தேவையான மாவு வகைகளை தயாரித்துக் கொள்ளலாம். கோதுமை மாவு போன்ற வகைகளைக் கூட கடையில் வாங்கினால் அதில் க்ளுட்டன் சேர்க்கப்படுவதால் அது உடலுக்கு நல்லதல்ல.
நாமே கோதுமை, ராகி போன்றவற்றை வாங்கி காய வைத்து அரைத்து வைத்துக் கொள்வது நல்லது.
லட்சியம், வெற்றி என்ற நோக்கத்திற்காக பயணிக்கும் இளைஞர்களும் பெரியவர்களும் தமது உடல்நலத்தையும் பேணிக் கொள்ள வேண்டும்.
அதற்கு முக்கியமாக அவர்கள் நினைவில் கொள்ள வேண்டியது…
‘ருசிக்காக உண்ணாமல் பசிக்காக உண்போம் !’என்பது தான்.
அதில் இப்போது இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அது என்னவென்றால் நமது உழைப்புக்கேற்ற உணவு உண்ண வேண்டும். அதுவும் சத்துணவாக உண்ண வேண்டும் என்பதுதான்.
கண் துஞ்சார், பசி நோக்கார், கருமமே கண்ணாயினார் என்று புறநானூற்றுப் பாடல் சொல்கிறது.
அதாவது ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்றால் பசியைப் பற்றிக் கவலைப்படாமல் வேலை செய்வார்களாம், காரியத்தில் கண்ணாயிருப்பார்களாம்.
இது சொல்வதற்கு நன்றாக இருக்கும். ஆனால் தொடர்ந்து தூங்காமல், சாப்பிடாமல் இருக்க முடியுமா என்ன? கண்டிப்பாக உடல்நலத்தை கவனிக்க வேண்டியது மிக முக்கியம்.
அளவான எண்ணெயில் தேவையான அளவு உப்பு, புளி, காரத்தோடு சமைக்கத் தெரிந்த பாட்டிமார்கள் இன்னமும் நம் இல்லங்களில் இருக்கிறார்கள்.
அவர்கள் வீட்டு வைத்தியத்தால் பலன்பெறும் குடும்பங்கள் எத்தனையோ.
மற்ற எல்லாவற்றையும் விட உணவு முக்கியமானது. ஏனெனில் ஒரு நாளைக்கு மூன்று முறையாவது உணவு உண்ண வேண்டும்.
‘வயிற்றுக்காகத்தானே இத்தனை பாடு படுகிறோம்!’ என்று கிராமங்கள¤ல் சொல்வதைக் கேட்டிருப்போம்.
தனிமனித வாழ்வில் மட்டுமல்ல ஒரு நாட்டிலும் கூட எத்தனை முறை எந்த உணவை சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் வாழ்க்கைத் தரமே தீர்மானிக்கப்படுகிறது.
உணவையும் வாழ்க்கையையும் பிரிக்கவே முடியாது. அதனால் ஒவ்வொருவருமே தாம் எத்தகைய உணவு உண்ண வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
எனவே நண்பர்களே! உடல்நலத்திற்காக அதே சமயம் கொஞ்சம் ருசியான தரமான உணவை உண்டு உடல்நலத்தைப் பேணிக்கொள்வதும் வாழ்க்கையின் வெற்றிக்கு முக்கியமான ஒரு விஷயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
(எழுத்தரசி ஜெய்சக்தி)