Homeலைப் ஸ்டைல்குற்றம் பார்க்கில்…!

குற்றம் பார்க்கில்…!

“குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை”என்ற பழ மொழியை எல்லாரும் அறிவோம்.
அந்தப் பழமொழி சொல்ல வருவது என்ன?

இதுகுறித்து பேசுவதற்கு முன்னால் இன்னொரு திரைப்படப் பாடல் ஒன்றும் நினைவிற்கு வருகிறது.
“குழந்தையும் தெய்வமும் குணத் தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று”.

அந்தப் பழமொழிக்கும் இந்தப் பாடலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்கிறீர்களா நண்பர் களே!
இருக்கிறது.

குழந்தைகள் தங்களது சகாக்களின் குற்றங்களை எளிதில் மறந்து விடுகிறார்கள். பக்கத்துப் பக்கத்து வீடுகளில் உள்ள இரண்டு குழந்தைகளுக்குள் சண்டை வந்து விடுகிறது. அவர்களுக்கு ஆதரவாக அவரவர்கள் வீட்டு பெரியவர்கள் அதிலும் பெண்கள் வந்துவிடுகிறார்கள். பெரிய சண்டை நடக்கிறது. இரண்டு வீட்டு பெண்களும் அப்படியா? இப்படியா? என்று கத்திக்கொள்கிறார்கள்.

பத்து நிமிடம் கத்தி ஓய்ந்து விட்டுப் பார்க்கிறார்கள். இரண்டு வீட்டுக் குழந்தைகளையும் காணவில்லை. கண்ணைச் சுழற்றிப் பார்த்தால் இரண்டு குழந்தைகளும் சற்று தூரத்தில் சிரித்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அதனால் தான், குழந்தைகள் சண்டைக்கு போகவே கூடாது என்பார்கள். ஏன்?
குழந்தைகள் குற்றங்களை சட்டென்று மறந்து விடுவார்கள்.
என்னுடைய அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன்.

நான் தலைமை ஆசிரியராக இருந்த காலத்தில் நடந்தது. ஒருநாள் பகல் நேரத்தில் ஒரு பெண்மணி ஆவேசமாக வந்து ஒரு குற்றப்பத்திரிகை வாசித்தார். அவர் கைப்பிடியில் இரு பையன்கள். ஒன்று அவரது மகன், இன்னொருவன் அவனது நண்பன்.

“இவன் தினமும் என் பையன் கொண்டு வர்ற சாப்பாட்டை சாப்பிட்ரான்”என்று குற்றச்சாட்டு. நான் பேசி அனுப்பி வைத்தேன்.

அந்த அம்மையார் போன ஐந்து நிமிடம் கழித்து இரண்டு பையன்களும் என்னிடம் வந்தார்கள்.
மேடம்! அவன் என் சாப்பாட்ட சாப்பிடறதெல்லாம் இல்லை. நானாதான் வற்புறுத்தி கொடுப்பேன். அவனோட சத்துணவு சாப்பாட்டை நான் கொஞ்சம் ஷேர் பண்ணிக்குவேன். எங்கம்மா என் மேல இருக்கிற பாசத்திலே கம்ப்ªளையின்ட் பண்றாங்க! என்று தன்னிலை விளக்கம் கொடுத்தான்.

நான் சிரித்துக் கொண்டே, சரி .சரி போங்க என்று அனுப்பி வைத்தேன். குழந்தைகள் அப்படித் தான். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் குழந்தைகள் தங்களைச் சுற்றி இருப்பவர்களின் குற்றங்களை உடனடியாக மறந்து விடுகிறார்கள்.

இந்த ஒரு குணத்தை குழந்தைகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் நாம் பல விதமான மனிதர்களைப் பார்க்கிறோம்.

நண்பர்கள், உறவினர்கள், துரோகிகள், எதிரிகள் என்று பல நிலைகளில் பலபேர். அதேபோல, நமக்காக குரல் கொடுப்பவர்களையும், ஆதரவு கரம் கொடுப்பவர்களையும் வாழ்க்கையில் நாம் பார்க்கிறோம். அதே போல், நமக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் குற்றம் இழைப்பவரையும் பார்க்கிறோம்.

‘அப்புறம், என்ன பண்றீங்க? நான் இப்பத்தான் சமையலை முடிச்சேன். அப்படியே எட்டிப் பாத்துட்டு போலாம்னு வந்தேன்என்று சற்றே தலையைக் காட்டி தேனொழுகப் பேசி மாமியார், மருமகளுக்கு முட்டல், மோதல் ஏற்படுத்தி விட்டுப் போகிற ஒரு பெண்ணை நாம் பார்க்க முடியும். ஒரு அலுவலகத்தில் பார்த்தால், ஒரு மொட்டைக் கடுதாசி அன்பர் இருப்பார். அவருக்கு வேலையே மொட்டைக் கடுதாசி போடுவதாக இருக்கும்.

அவ்வளவு ஏன்? குடும்பத்துக்கு உள்ளேயே ஒரு கலக மாமா, ஒரு குயுக்திக்கார அத்தை என்று இருக்கத்தான் செய்வார்கள். இவர்களை எல்லாம் எப்படித் தான் சமாளிப்பது? அவர்களது பேச்சு பெரிதாக ஆபத்தை விளைவிக்காதவரை அவர் கள் பேச்சை அலட்சியப்படுத்தி விடலாம்.

எட்டிப் பார்த்து கலகம் விளைவிக்கிற அந்த பெண்ணை என்ன செய்வது? மாமியாரும் மரும களும் உட்கார்ந்து பேசி, அந்த பெண் என்ன நோக்கத்தோடு வருகிறாள் என்பதைக் கலந்து பேசிப் புரிந்து கொண்டு ஒரு நமட்டுச் சிரிப்போடு கடந்து விட வேண்டும். உறவினர்கள் கலந்து பேச வேண்டும் என்பதைத்தான் வள்ளுவர் அழகாகச் சொல்கிறார்.

‘அளவளாவு இல்லாதான் வாழ்க்கை, குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று’ அதாவது, உறவினர்களோடு கலந்து பேசாதவன் வாழ்க்கை கரை இல்லாத குளத்தில் நீர் நிரம்புவது போன்ற தன்மையுடையது என்கிறார். எப்போதோ நிகழ்ந்த ஒரு அவமானகரமான நிகழ்வு...! தேவையற்ற பேச்சு...! இவற்றை மனதில் சுமந்து கொண்டே அலைய வேண்டியது இல்லை. கடந்து போக வேண்டும்.

அதே சமயம் நம் மன நிம்மதியைக் கெடுக்கும் அளவுக்குத் தீயது செய்வோராக இருந்தால் லாவகமாக ஒதுக்கிவிட வேண்டும். மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு. சிசுபாலன் என்று ஒரு பாத்திரம். கிருஷ்ண பரமாத்மாவுக்கு அத்தை மகன் சிசுபாலன்.

பிறக்கும்போது நான்கு கைகளுடனும், மூன்று கண்களுடனும் பிறக்கிறான். கிருஷ்ண பரமாத்மா குழந்தையை பார்க்க வந்து குழந்தையை கையில் எடுக்கும்போது சிசுபாலனுடைய தேவைக்கு அதிகமான இரண்டு கைகளும், ஒரு கண்ணும் மறைந்து விடுகின்றன. சிசுபாலனுடைய தாய் மகிழ்ச்சி அடைவதற்கு பதிலாக வருத்தப்படுகிறார்.

ஏனென்றால், யார் தொட்டால் அதிகப்படியான உறுப்புகள் மறைந்து விடுகிறதோ அவனால் தான் சிசுபாலன் கொல்லப்படுவான் என்பது தான் காரணம்.ஆனால், நூறு குற்றங்களை பொறுப்பேன் என்று கிருஷ்ணர் அத்தைக்கு வரம் தருகிறார். அதேபோல, ராஜசூய யாகத்தின் போது கிருஷ்ணனைத் தூற்றுகிறான் சிசுபாலன்.

கிருஷ்ணர் நூறு முறை அவன் பேசுவதை மன்னிக்கிறார். அதற்குப் பிறகு தான் கொல்கிறார். இதைத்தான் குற்றம் பொறுத்தல் என்கிறோம்.இது ராஜபாட்டை அல்லஎன்ற பெயரில் நடிகர் சிவக்குமார் அவர்கள் ஒரு கட்டுரைத் தொடரை ஒரு பிரபல பத்திரிகையில் எழுதினார். அதில், அழகாகச் சொல்வார். கிட்டத்தட்ட கருத்து இதுதான்.

வார்த்தைகள் வேறாக இருக்கலாம். உங்களுக்குத் துன்பம் இழைத்தவர்கள் கண்டிப்பாக அதற்கான தண்டனையை ஒரு சமயம் பெறுவார்கள்.அப்படி, அவர்கள் துன்பப்படும்போது நாம் பார்த்துக் கொண்டிராமல் ஓடிப்போய் கைகொடுக்க வேண்டும்என்று சொல்கிறார். இந்தக் கருத்தில் சுற்றந்தழால் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுகிறார்.

‘உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல்’ அதாவது, ஒரு அரசனைப் பற்றிச் சொல்வது போல் சொல்கிறார். உன்னிடமிருந்து ஏதோ ஒரு காரணத்திற்காக பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால் அவர்களை அரவணைத்து உதவிகள் செய்ய வேண்டும் என்பது தான் பொருள். ’அத்தனை சொந்தக்காரர்களுக்கு மத்தியில் அவள் என்னை என்ன பேசினான் தெரியுமா? எப்படி மறக்கச் சொல்றே?’

‘மகனைப் பெற்று அப்படி வளர்த்தேன். ஆனா, இன்னைக்கு இப்படிப் பேசறா என் மருமகள்பாரின்ல இருந்து வந்தவன் எல்லா வீட்டுக்கும் போறான், எங்க வீட்டுக்கு வழி தெரியலே. இப்படிப் பல விதமான கோபங்கள். எல்லாவற்றையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் நம்மைத் தேடி வந்தால் நாம் பழையதை மறந்து அரவணைத்துக் கொண்டால் நமக்கு மன நிம்மதி கிடைக்கும்.

சுற்றம், நண்பர்களை மட்டும் அல்ல மற்றவர்களையும் கூட நாம் மன்னித்தால் நமக்கு நிம்மதி கிடைக்கும். இயேசு பிரானை சிலுவையை சுமக்கச் செய்து தெருவிலே இழுத்துக் கொண்டு வந்தார்கள். சிலுவையில் அறைந்தார்கள். அப்போது கூட இயேசு பிரான் என்ன செய்தார்?‘பரமபிதாவே இவர்கள் அறியாமல் பிழை செய்கிறார்கள், மன்னித்து விடுங்கள்!’என்று தான் வேண்டினார்.

தான் வாழும் காலத்தில் இன்னொன்றையும் சொன்னார்.ஒருவன் ஒரு கன்னத்தில் உன்னை அறைந்தால் இன்னொரு கன்னத்தை காண்பி என்று! காந்தியடிகள் கோட்சேயால் சுடப்பட்டபோது கூட,அவரை எதுவும் செய்ய வேண்டாம்என்று தான் கேட்டுக் கொண்டார். அப்படி ஒரு மனப்பான்மையை வைத்துக்கொண்டால் தான் வாழ்க்கையை இலகுவாகக் கடக்க முடியும். குடும்பத்தில் இந்தக்குற்றம் பார்க்காத மனப்பான்மை இருந்தால் அந்த குடும்பம் அமைதியாக வாழும்.

கிராமங்களில் இன்னும் சில பெரியவர்களைப் பார்க்கலாம். எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் மலை போல நிற்பார்கள்.சரி… தெரியாமப் பண்ணிட்டான், விடுய்யாஎன்று எத்தனையோ பேருடைய குற்றங்களை பொறுத்துப் போகிற மனப்பான்மை உடையவர்களால் தான் அப்படி இருக்க முடியும்.

‘குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக் கொள்ளல் உனக் கியல்பே!’ என்று வள்ளலார் இறைவனைப் பார்த்து பாடுகிறார். அதாவது, நம் குற்றங்களை எல்லாம் மன்னிப்பது இறைவன் மாண்பாக அமைகிறது. நாம் நம் வாழ்க்கையில் எல்லாரையும் மன்னிக்கிற அளவிற்கு இல்லையென்றாலும் மறந்து விடவாவது செய்யலாம் என்று கடந்து போய் விடலாம். சுகிசிவம் ஐயா அவர்கள் ஒரு கதை சொன்னார்.

ஒரு மளிகை கடை நடத்தி வருகிறார் ஒருவர். அவரிடம்,உங்க கடையில இந்த ரொட்டி வாங்கினேன், கெட்டுப் போச்சு` என்று வேறெங்கோ வாங்கிய பொருளைக் கொண்டு வந்து கூட கொடுப்பார்களாம். அவர் தெரிந்தே வாங்கிக் கொள்வாராம். செல்லாத நாணயங்களைக் கூட பொருள் வாங்க கொடுப்பார்களாம். தெரியாதது போல வாங்கிக் கொள்வாராம்.
அவர் தனது இறுதிக் காலத்தில் இறைவனிடம் வேண்டினார்.

நான் என்னை ஏமாற்றியவர்களின் குற்றங்களைப் பொறுத்துக் கொண்டேன். நல்ல நாணயமா, கெட்ட நாணயமா என்று பார்த்ததில்லை. அதே போல், இறைவா நான் நல்லவனா, கெட்டவனா என்று பார்க்காமல் எனது குற்றங்களைப் பொறுத்துக் கொள், என்னை ஏற்றுக்கொள் என்று சொன்னாராம்.

குற்றங்கள் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யத்தை இழந்து விடும். அதற்காகத் திட்டமிட்டு தீங்கு இழைப்பவர்களை எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அப்படிப் பட்டவர்களை இனம் கண்டு ஒதுக்கி விட வேண்டும்.

மற்றபடி சின்னச்சின்ன குற்றங்களை இழைப்பவர்களைப் பொறுத்துக் கொள்ளவும் பழக வேண்டும். வெற்றியைத் தேடுபவர்கள் குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று நண்பர்களே!.

படிக்க வேண்டும்

spot_img