தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றதுமே காங்கிரஸ் கட்சி அறிவித்த 6 வாக்குறுதிகளை அமல்படுத்தும் கோப்புகளில் முதல் கையெழுத்திட்டார்.
அதில் ஒன்று தான் பேருந்துகளில் மகளிர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக பயணம் செய்ய வழங்கப்படும் சலுகை. இதற்கு ‘மகாலட்சுமி இலவச பேருந்து’ திட்டம் என பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்தை முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று மதியம் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா? சிட்டி ஆர்டினரி, எக்ஸ்பிரஸ், மெட்ரோ எக்ஸ்பிரஸ், பல்லே வெலுகு என தெலுங்கானா அரசின் அனைத்து வகை பேருந்துகளிலும் இந்த பெண்களுக்கான இலவச பயண திட்டம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும், தெலுங்கானா மாநில எல்லைக்குள் இலவசமாக பயணிக்கலாம். அவர்களுக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படுவது போல ‘ஜீரோ டிக்கெட்’ வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் இந்த திட்டத்தை தெலுங்கானா அரசு நகல் எடுத்திருந்தாலும், தமிழக அரசை விட கூடுதலான பலன்களை வழங்குகிறது.
அதாவது, தமிழ்நாட்டில், அரசு நகரப் பேருந்துகளில் மட்டுமே பெண்களுக்கு கட்டணம் இலவசம். தொலைதூர மற்றும் விரைவுப் பேருந்துகளில் இந்த இலவச டிக்கெட் பயணம் கிடையாது. ஆனால், தெலுங்கானாவில் அனைத்து வகை அரசு பேருந்துகளிலும், பெண்களுக்கு இலவச பயணம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டிலேயே முதன்முதலாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணத் திட்டத்தை & திராவிட மாடல் திட்டத்தை வாக்குறுதியாக வழங்கிய காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்திட்டு தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி உடனடியாக செயல்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகத்தில் நடக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் போன்ற ஏழைப் பெண்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை!



