கரூர் மாவட்டம், இரும்பூதிப்பட்டியில் செயல்பட்டு வரும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், “நிறைந்தது மனம்“ நிகழ்வில் நேற்று (1ம் தேதி) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்விற்குப் பின் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வேளாண் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அறிவித்துச் செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்கும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேளாண்மை விற்பனைக்குழுவின் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், நுகர்வோர் குறைந்த விலையில் காய்கறிகளைப் பெற்று பயன்பெறவும் உழவர் சந்தைகள் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக நெல், கொப்பரை, மக்காச்சோளம், எள்ளு, நிலக்கடலை, பருத்தி, தேங்காய், மரவள்ளி மற்றும் கரும்பு வெல்லம் உள்ளிட்ட விளைபொருட்கள் இடைத்தரகர்களின் தலையீடு இன்றி விவசாயிகளுக்கு நேரடியாக விற்பனை செய்து கொடுக்கப்படுகிறது.
திருச்சி விற்பனைக் குழுவின் கீழ் கரூர் மாவட்டத்தில் கரூர், சின்னதாராபுரம், குளித்தலை மற்றும் இரும்பூதிப்பட்டி உள்ளிட்ட 4 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1,500 மெ.டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன.
திருச்சி விற்பனைக்குழுவின் கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் 1,049 மெ.டன் வேளாண் விளைபொருட்கள் வரத்து வரப்பெற்றுள்ளது. இதன் மூலம் ரூ.8 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அதேபோன்று, கிட்டங்கிகளில் 70 மெ.டன் வேளாண் விளைபொருட்களை விலை குறைவான காலங்களில் விவசாயிகள் இருப்பு வைத்து நல்ல விலை கிடைக்கும் பொழுது விற்று 15 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
கரூர் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 956 விவசாயிகளுக்கு ரூ.7.94 கோடி பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
2025-2026ம் ஆண்டு கரூர் மற்றும் இரும்பூதிப்பட்டி ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு, விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்று பயன்பெற வழிவகுக்கிறது.
விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ரூ.3.60 கோடி மதிப்பிலான 328 மெ.டன் கொப்பரை 261 தென்னை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. அனைத்து கிட்டங்கிகளும் கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் மூலம் பதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூட சேமிப்பு கிடங்குகளில் தங்களது விளைபொருட்களை மழைக்காலங்களிலும், விலைவீழ்ச்சி காலங்களிலும் சேமித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் இரும்பூதிப்பட்டியில் செயல்பட்டுவரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளை பொருட்களை விற்பனை செய்து பயனடைந்துவரும் மருதூர் பகுதியைச் சேர்ந்த வி.ஈஸ்வரன் தெரிவித்ததாவது:
நான் மருதூரில் எனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றேன். எனக்கு 3 ஏக்கர் விவசாய பூமி உள்ளது. எங்களது நிலத்தில் பருத்தி சாகுபடி செய்து வருகிறேன். மேலும், மீதமுள்ள நிலத்தில் வெண்டை, கத்திரி உள்ளிட்ட காய்கறிகள் பயிரிட்டு வருகிறேன்.
கடந்த காலங்களில் பருத்தியை இடைத்தரகர்களிடம் விற்பனை செய்து வந்தேன். இதன் மூலம் எனக்கு மிகவும் சொற்பமான வருமானமே கிடைத்து வந்தது. இந்த வருமானத்தை வைத்து எனது குடும்பச் செலவுகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய சூழல் இருந்து வந்தது.
தற்போது தமிழ்நாடு அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தியை உரிய விலையில் கொள்முதல் செய்யப்படுவதாக தெரியவந்தது.
எனவே, இடைத்தரகர்களிடம் விற்பனை செய்வதை தவிர்த்து, இந்தாண்டு முதல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்து வருகிறேன். தற்போது பருத்திக்கு நல்ல விலை கிடைப்பதால் நல்ல லாபம் கிடைக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் எனக்கு சுமார் ரூபாய் 2 லட்சம் அளவிற்கு வருமானம் கிடைத்துள்ளது.
இது இடைத்தரகர்களிடம் வழங்கப்பட்ட தொகையைக் காட்டிலும் ஒரு லட்சம் ரூபாய் அதிகமாகும். மீதமுள்ள எனது விவசாய நிலத்தில் வெண்டை, கத்திரி உள்ளிட்ட காய்கறிகளை விளைவித்து விற்பனை செய்து வருகிறேன். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி இரட்டிப்பு இலாபத்தை கிடைக்கச்செய்யும் நோக்கோடு வேளாண்மைத் துறையில் பல்வேறு புதுமைகளை புகுத்திவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்னைப் போன்ற விவசாயிகளின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஈஸ்வரன் தெரிவித்தார்.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் இரும்பூதிப்பட்டியில் செயல்பட்டுவரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளை பொருட்களை விற்பனை செய்து பயனடைந்துவரும் பரளி பகுதியைச் சேர்ந்த மனோகரன் அவர்கள் தெரிவித்ததாவது:
நான் பரளியில் எனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றேன். எனக்கு 2.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
எங்களது நிலத்தில் நெல் பயிர் சாகுபடி செய்து வருகிறோம். எங்கள் நிலத்தில் விளையும் நெல்லை வெளி சந்தைகளில் இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்து வந்தோம். மேலும், மீதமுள்ள நிலத்தில் தோட்டக்கலைப் பயிர்களும் சாகுபடி செய்துள்ளோம்.
வெளி சந்தைகளில் எங்களது விளை பொருட்களுக்கு குறைவான விலைக்கு கேட்பதால் விளைபொருட்களை விற்பனை செய்யும்போது போதிய வருவாய் இல்லாத சூழ்நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் செய்தித்தாள்கள் வாயிலாக, விவசாயிகளுக்கு நேரடியாக உதவிடும் வகையில் விவசாயிகள் அறுவடை செய்த தங்களின் விளை பொருட்களை உலர்த்திக்கொள்ள உலர் கள வசதியும், சேமித்து வைக்கவும், நியாய விலைக்கு விற்பனை செய்யவும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருவதை அறிந்து கொண்டேன்.
இதனைத்தொடர்ந்து, தொடர்புடைய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தினைத் தொடர்பு கொண்டு எனது விவசாய நிலத்தில் விளைவிக்கப்பட்ட நெல்லை விற்பனை செய்ய சிட்டா, அடங்கல், ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்துடன் முன்பதிவும் செய்து கொண்டேன். அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெளி சந்தைகளைவிட நெல் கொள்முதல்களுக்கு கூடுதல் விலை கிடைப்பதால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திவரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொகுப்பு:
க.செந்தில்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
கரூர் மாவட்டம்.



