பொதுவாக, தேர்தல் அறிகுறிகள் தெரியத் தொடங்கியதும் ஆட்சியமைப்பதற்காக அல்லது ஆட்சியைத் தக்க வைப்பதற்காக வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் அள்ளித் தெளிப்பது வாடிக்கையான ஒன்று.
சில நேரங்களில், செயல்படுத்த முடியுமா, முடியாதா? என்பதைப் பற்றி கூட கவலைப்படாமல் மெகாஅறிவிப்புகளை அச்சமின்றி வெளியிடுவார்கள். ஆனால், அது பின்னாளில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது வேறு கதை.
அது தான் இப்போது பீகாரில் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு நவம்பர் மாதத்தில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஒருபுறம் கூட்டணி மற்றும் தொகுதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் அக்கட்சிகளில் உள்ள தலைவர்கள் நாளுக்குநாள் போட்டிபோட்டுக் கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றனர்.
மகுடிக்கு அடங்கும் பாம்பு போல வாக்காளர்களை வசியப்படுத்தும் அனைத்து யுக்திகளையும் தலைவர்கள் கையாண்டு வருகிறார்கள்.
பீகாரில் எதிர்க்கட்சிகளின் ‘மகாகத்பந்தன்’ கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், ”பீகாரில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சிறப்பு வேலைவாய்ப்புச் சட்டம் இயற்றப்படும்; ஆட்சிக்கு வந்த 20 நாள்களுக்குள் இச்சட்டத்தைக் கொண்டு வருவோம். மேலும் 20 மாதங்களில் இது செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்” என அவர் தெரிவித்திருப்பதுதான் அம்மாநில இளைஞர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், “வரும் ஆண்டுகளில் மாநிலத்தில் ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலைகள் மற்றும் பிற வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்; பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்; அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசம்; முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் அதிகரிப்பு” என பல அறிவிப்புகளை வெளியிட்டு பீகார் மாநில வாக்காளர்களைக் கவர்ந்தார்.
ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.2 லட்சம் கோடி நிதிப்பலனை அளித்த பிரதமர் மோடி, அதற்குப் பிறகும் அடுத்தடுத்த அறிவிப்புகளால், பீகார் மக்களை திணறடித்தார். தவிர, மூன்றாவது முறை பிரதமராகப் பொறுப்பேற்ற மோடி, கடந்த 15 மாதங்களில் மட்டும் 7 முறை பீகாருக்குச் சென்றிருக்கிறார்.
இன்னொரு புறம், தேர்தல் வியூகவாதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஜன் சுராஜ் கட்சியின் (ஜேஎஸ்பி) நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், மற்ற இரு கூட்டணிகளுக்குப் போட்டியாக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அவர், “ஆண்கள், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்குவோம். ஒவ்வொரு கிராமத்திலும், அரசுப் பள்ளிகளின் நிலை மேம்படும் வரை, மக்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். அவர்களின் கட்டணங்களை அரசே ஏற்கும்” எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இவற்றை தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், முதல் 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
இப்படி மாறிமாறி அரசியல்கட்சித் தலைவர்கள் அளித்துவரும் தேர்தல் வாக்குறுதிகளால், பீகார் வாக்காளர்களுக்கு ஜாக்பாட் அடிக்கத் தொடங்கி விட்டது என்பது என்னவோ உண்மை தான்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பீகார் மாநில மக்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். ஆனால் யாருடைய வாக்குறுதிகளை நம்பி வாக்காளர்கள் தங்கள் ஒற்றை விரலால் பெருமளவில் முத்திரை பதிக்கப் போகிறார்கள்? என்பது பீகார் மாநில வரைபடத்தை மறைத்த படி உருவாகி இருக்கும் விஸ்வரூப கேள்வி!



