சர்வதேச கிக்பாக்சிங் போட்டிகள் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் உள் விளையாட்டு அரங்கில் பிப்ரவரி மாதம் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்காக இந்திய நாட்டிலுள்ள மாநிலங்களில் கடந்த மூன்று வருடங்களாக வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.
தரவரிசை பட்டியலில் சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்பதற்காக தேனி மாவட்டத்தில் இருந்து ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சார்ந்த அரசு பள்ளிகளில் படிக்கும் ஆறு மாணவ, மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர்.
சீனியர் பிரிவு, ஜூனியர் பிரிவு, சப் ஜூனியர் பிரிவு என மூன்று பிரிவுகளில் யாழினி, சம்சிதா , கிருபா ஸ்ரீ , வசுமதி , ரீகாஸ்ரீ , சபரிஸ் ஆகிய ஆறு மாணவ மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு ஆண்டிப்பட்டி அருகே உள்ள கன்னியப்பிள்ளைபட்டியில் உள்ள கிக்பாக்ஸிங் உள் அரங்க கூடத்தில் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சியை தேனி மாவட்ட கிக்பாக்சிங் பயிற்சியாளர் துரைமுருகன் தினமும் 6 மணி நேரம் வரை அளித்து மாணவர்களை சர்வதேச கிக்பாக்சிங் போட்டிகளுக்கு தயார்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் சர்வதேச போட்டிகளுக்கு தேர்வான கிராமப்புற ஆறு அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தேனி மாவட்ட கிக்பாக்சிங் சங்கம் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது.
தேனி மாவட்ட தலைவர் மகாராஜன், மாவட்டச் செயலாளர் சுரேஷ்பாபு, துணை பயிற்சியாளர் ஜெயவேல் ஆகியோர் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர்.



