இப்போ என்ன நடந்துவிட்டது? ஏன் கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தம்? சிராஜும், ரோஹித் ஷர்மாவும் கோலியும் கண்ணீர் விட அவசியம் என்ன வந்தது? தேவையில்லை. ஒட்டுமொத்த உலக கோப்பையிலும் ஒரே ஒரு போட்டியில் தோற்றதற்கா இந்த சோகம்?
நடப்பு சாம்பியன் என்று மார்தட்டி வந்த இங்கிலாந்து புள்ளிப்பட்டியலில் ஆப்கானிஸ்தானுக்கு கீழே இடத்தை பிடித்து வெளியேறியபோதும் கூட, அப்போது அவர்கள் யாரும் அழவில்லையே. 10 போட்டிகளில் தொடர்ந்து வென்று, ஒற்றை போட்டியில் தோற்றதற்கா இந்த சோகம்?
என்ன இருந்தாலும் இது ஃபைனல்.. கோப்பையை கைப்பற்ற இந்த ஒற்றைப் போட்டியில் வென்றிருந்தாலும் மொத்த உழைப்புக்கும் பலன் கிடைத்திருக்குமே என்ற வாதம் புரிகிறது.
கிரிக்கெட் என்பது மாயாஜாலம் கிடையாது. அன்றைய நாளில் யார் சிறப்பாக ஆடுகிறார்களோ அவர்களுக்கே வெற்றி. அரையிறுதியில் ஆபத்தாக காணப்பட்ட நியூசிலாந்தை ஊதித்தள்ளினோம். இதே ஆஸ்திரேலியாவை லீக் போட்டியில் உதைத்து வெற்றி கண்டோம். எனவே இந்தியாவின் தீரத்தை குறைத்து மதிப்பிட முடியாது.
இப்போதும் கடைசி வரை போராடிதான் ஆஸ்திரேலியாவால் வெற்றி பெற முடிந்தது. வீரத்தோடு போரிட்டதை நினைத்து உவகை கொள்ள வேண்டுமே தவிர, வெற்றி தோல்விகளை நினைத்து கண்ணீர் சிந்தக்கூடாது.
நாம் நமது அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் போல சரணடையவில்லை. ஃபைனல் வரை ஒரு தோல்வி கூட பார்க்காமல் சென்று, ஃபைனலிலும் ஆஸ்திரேலியாவிற்கு ஒருகட்டத்தில், மரண பயத்தை காட்டி நூலிழையில் வெற்றியை எதிரணிக்கு கொடுத்துள்ளோம். அவ்வளவுதான் விஷயம்.
நம்மை விட ஃபைனல் போட்டியில் கொஞ்சம் ஆஸ்திரேலியா சிறப்பாக ஆடிவிட்டார்கள். இவ்வளவுதான் இரு அணிகளுக்குமான இடைவெளி.
சச்சின் அவுட்டானால் மொத்த டீமுமே காலி என்ற நிலையிலிருந்து கடந்த சில வருடமாகத்தான் நாம் தீரத்தோடு போராட கற்றுக்கொண்டுள்ளோம். இதுதான் நமது அடுத்த தலைமுறை வீரர்களுக்கு உத்வேகம்.
கண்ணீரை துடைத்து தடைகளை உடைத்து வீறு கொண்டு எழ வேண்டியதே தற்போதைக்கு நமக்கு தேவை. அடுத்த உலகக்கோப்பை போட்டியில் வெற்றிக்கனியைப் பறிக்க தயாராகட்டும் இந்தியா.
இந்திய கிரிக்கெட் வீரர்களே, சல்யூட்!



