நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, எதிர்க் கட்சிகளின் ‘இந்தியா’ அணி, ஆளும் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆகிய இரண்டும் பரபரப்பாக களமிறங்கியிருக்கின்றன. தற்போதைய நிலையில், இந்தியா
அணியில் 26 கட்சிகளும் என்.டி.ஏ-வில் 38 கட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன.
இவை தவிர, ஆந்திராவில் ஆட்சியில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலங்கானாவில் ஆட்சியில் இருக்கும் பாரத் ராஷ்டிர சமிதி, ஒடிசாவில் ஆட்சியில் இருக்கும் பிஜு ஜனதா தளம், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், உ.பி-யில் பகுஜன் சமாஜ் கட்சி, அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் என பல கட்சிகள் இரு அணிகளிலும் சேராமல், தனித்தனியாக இருக்கின்றன.
2019- நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், பா.ஜ.க 303 இடங்களையும் காங்கிரஸ் கட்சி 52 இடங்களையும் பெற்றன. ஆனால், கடந்த தேர்தலின்போது இருந்த அரசியல் சூழல் இப்போது இல்லை.
நாடாளுமன்றத்தில் 303 இடங்களுடன் பலமான கட்சியாக பா.ஜ.க இருந்தாலும், 10 மாநிலங்களில் மட்டுமே அது ஆட்சியில் இருக்கிறது. ஆகவே, கடந்த முறையைப் போலவே அதிக வாக்குகளை என்.டி.ஏ பெறுவது சாதாரணமான விஷயமல்ல.
இப்போதும் பழைய வாக்கு வங்கி அப்படியே இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. முன்பு போல எல்லா மாநிலங்களிலும் அவர்களுக்கு ஆதரவு இருக்கிறது என்று சொல்ல முடியாது. குஜராத், உ.பி ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க அதிக இடங்களைப் பெறும்.
தற்போது, சமாஜ்வாடி கட்சியும் காங்கிரஸும் ‘இந்தியா‘ அணியில் இடம்பெற்றிருக்கின்றன.
உ.பி-யில் சமாஜ்வாடி செல்வாக்கு மிகுந்த கட்சி. கர்நாடகா வெற்றிக்குப் பிறகு அங்கு காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக அந்தக் கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள். ஒருவேளை அங்கு, சமாஜ்வாடியும் காங்கிரஸும் கூட்டணி சேர்ந்தால், அது பா.ஜ.க-வுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.
அதுபோல, குஜராத்தில் பா.ஜ.க நல்ல செல்வாக்குடன் இருக்கிறது. அதே நேரத்தில், அங்கு ஆம் ஆத்மி 12 சதவிகிதம் வாக்குகளை வாங்கியிருக்கிறது. அங்கு, காங்கிரஸும் ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்தால், பா.ஜ.க-வுக்கு போட்டியைக் கொடுக்க முடியும்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியுடன் பா.ஜ.க-வுக்கு சுமூகமான உறவு இருக்கிறது. ஆனால், சந்திரபாபு நாயுடுவுடன் பா.ஜ.க கூட்டணி சேர்ந்துவிட்டால், ஜெகன்மோகன் ரெட்டி எதிரியாகிவிடுவார். அங்கு, பா.ஜ.க-வுக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் பெரிய வாக்கு வங்கி கிடையாது.
மகாராஷ்டிராவில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும். தமிழ்நாட்டில் இந்தியா அணி வலுவாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி இனிமேல் தான் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும். கேரளாவில் கம்யூனிஸ்ட்டும், காங்கிரஸும் வலுவாக இருக்கின்றன.
அங்கு, என்.டி.ஏ-வுக்கு பெரிய வாக்கு வங்கி கிடையாது. தெலங்கானாவில் காங்கிரஸுக்கும் ஆளும் பி.ஆர்.எஸ்-ஸுக்கும் இடையே கடும் போட்டி நடக்கிறது. பா.ஜ.க-வுக்கு அங்கு பெரிய வாக்கு வங்கி கிடையாது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கிறது.
மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க செல்வாக்கு இழந்திருக்கிறது. அங்கு, காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி பலமாக இருக்கிறது.
அங்கு, பா.ஜ.க பலவீனமாக இருக்கிறது. கடந்த முறை என்.டி.ஏ-வில் இருந்த அகாலி தளம் பின்னர் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டது. அது, மீண்டும் பா.ஜ.க கூட்டணிக்கு வருமா என்பது தெரியவில்லை. இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி செல்வாக்குடன் இருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில் 25 தொகுதிகள் இருக்கின்றன. தற்போது மணிப்பூர் வன்முறையால் பா.ஜ.க-வுக்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது. அங்கு கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் நிலையில், பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டால், பா.ஜ.க எதிர்ப்பு அதிகரிக்கும் சூழல் இருக்கிறது.
தற்போது எதிர்க்கட்சிகள் வலுவடைந்து வருவதால் பா.ஜ.க கூட்டணி அதிர்ச்சியடைந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. எனினும் பாஜகவின் பலத்தை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.
இந்தியா
அணி பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் களமிறங்கி இருக்கிறது.தற்போதைய நிலவரப்படி இரு அணிகளில் எந்த அணிக்கு வாக்கு வங்கி அதிகம் என்பது பற்றி அரசியல் விமர்சகர்கள் சல்லடை போட்டு அலசி வருகிறார்கள்.
இந்த இரு அணிகளையும் தராசின் இரு தட்டுகளிலும் வைத்து இந்திய வாக்காளர்கள் தூக்கி நிறுத்தத் தொடங்கி விட்டனர். எந்தப் பக்கம் எடை கூடுமோ?
மாதங்கள் விரைவாக உருண்டோடி விடும்.
2024 புத்தாண்டு பிறக்கட்டும்; விடை கிடைத்துவிடும்!